விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேறியதற்கு யார் பொறுப்பு..? - நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி


விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேறியதற்கு யார் பொறுப்பு..? - நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி
x

நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதற்கு யார் பொறுப்பு என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடர்ந்து முடங்கி வருகிறது.

இதன் காரணமாக இந்த நிதி ஆண்டுக்கான (2023-24) மத்திய பட்ஜெட், எந்த விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் வேதனை வெளியிட்டார். அவர், இந்திய பொருளாதாரத்தின் வெற்றிக்கதையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு எதிர்க்கட்சிகள் திசை திருப்பும் உத்திகளைக் கையாள்வதாக குற்றம் சாட்டி இருந்தார்.

அப்போது அவர், "பட்ஜெட் மீதான விவாதமானது, எனக்கு பட்ஜெட்டின் நேர்மறையான அம்சங்களை விளக்குவதற்கான வாய்ப்பை அளித்திருக்கும், அது நடக்காமல் போனதால் நான் மிகவும் வருந்துகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஆண்டுதோறும் நேர்மையான, வெளிப்படையான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து வருகிறது" என குறிப்பிட்டார்.

ப.சிதம்பரம் கேள்வி

இதற்கு பதிலடி தருகிற வகையில் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீது விவாதம் நடைபெறவில்லை என்று மரியாதைக்குரிய நிதி மந்திரி புலம்பி இருக்கிறார். விவாதம் இன்றி பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதற்கு யார் பொறுப்பு?

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக, ஆளுங்கட்சி எம்.பி.க் கள்தான் சபையில் அமளியை ஏற்படுத்தி இடையூறு செய்து, விவாதத்தை தடுத்து விட்டனர் என்று அவர் கூறி உள்ளார்.

பொருளாதார வளர்ச்சி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கியின் கணிப்பு பற்றிய ஒரு டுவிட்டர் பதிவையும் ப.சிதம்பரம் செய்துள்ளார்.

அந்த பதிவில் அவர், "மோடி அரசின் 5 ஆண்டு கால (2019-24) சராசரி பொருளாதார வளர்ச்சி 4.08 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கூறி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்டுக்கு பின்னர் வந்த ஆண்டுகளிலும்கூட வருடாந்திர வளர்ச்சி விகிதம் குறைந்து வரும் போக்கையே பார்க்க முடிகிறது. பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பற்றி மத்திய அரசு மட்டுமே பெருமை பேசுகிறது என கூறி உள்ளார்.


Next Story