சீனா போருக்கு தயாராகுகிறது... இந்திய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது - ராகுல்காந்தி விமர்சனம்
சீனா போருக்கு தயாராவதாகவும், இந்திய அரசு தூங்கிக்கொண்டிருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல்காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அருணாச்சலபிரதேச எல்லையில் சீன படைகள் ஊடுருவ முயற்சித்தது, இந்திய-சீன படைகள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ராகுல்காந்தி, தற்போதைய சூழ்நிலையை நான் பார்க்கும்போது சீனா ஆக்கிரமிப்பிற்கு தயாராகவில்லை மாறாக முழுமையான போருக்கு தயாராகுகிறது. சீன படைகள் இந்திய வீரர்களை தாக்கியுள்ளனர். ஆபத்து தெளிவாக உள்ளது. ஆனால், அந்த ஆபத்தை நமது அரசு புறக்கணிக்கிறது. நம்மிடம் உண்மையை மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது ஆனால், உண்மையை நம்மிடமிருந்து நீண்டநாள்கள் மறைக்க முடியாது.
சீனாவிடம் கவனமாக இருக்கும்படி இந்த அரசை நான் எச்சரிக்கிறேன். சீனாவின் நடவடிக்கைகளை பாருங்கள்... லடாக், அருணாச்சலபிரதேச எல்லையில் (போருக்கு) தயாராகி வருகின்றனர். ஆனால், இந்திய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா கைப்பற்றிவிட்டது.
ஆட்சியில் இருந்து பாஜகவை காங்கிரஸ் தூக்கி வீசும் எனது வார்த்தைகளை குறித்துவைத்துக்கொள்ளுங்கள்' என்றார்.