உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கில் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு


உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கில் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு
x
தினத்தந்தி 7 Aug 2023 6:45 PM GMT (Updated: 7 Aug 2023 6:46 PM GMT)

உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கு குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

உடுப்பி கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கு குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

ஆபாச வீடியோ விவகாரம்

கர்நாடக மாநிலம் உடுப்பியை அடுத்த அம்பலபாடியில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள், கல்லூரி கழிவறையில் செல்போனை வைத்து சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து, அந்த வீடியோவை கல்லூரி ஆண் நண்பர்களின் வாட்ஸ்-அப் குழுவிலும் பகிர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் உடுப்பி மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

3 மாணவிகள் மீது வழக்கு

இதற்கிடையே கழிவறையில் செல்போனை வைத்து சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த 3 மாணவிகளையும் இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் 3 மாணவிகள் மீதும் மல்பே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், எந்த வீடியோ ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

நடிகை குஷ்பு ஆய்வு

இதற்கிடையே தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பு, உடுப்பி கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், கல்லூரி கழிவறையில் செல்போன் கேமரா உள்பட எந்த ரகசிய கேமராவும் வைக்கப்படவில்லை. மேலும் மாணவிகள், மாணவர்களின் செல்போன்களில் எந்த வீடியோவும், ஆபாச படமும் இல்லை. இந்த விவகாரத்தில் போலி வீடியோக்கள் சமுக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இந்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். மேலும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

செல்போன் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

இந்த நிலையில் கல்லூரி மாணவி ஆபாச வீடிேயா விவகாரத்தில் செல்போனில் இருந்த வீடியோ அழிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் போலீசார் கடந்த 28-ந்தேதி அந்த செல்போனை பெங்களூருவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த செல்போனில் இருந்து வீடியோவை அழித்தாலும், அது செல்போனில் உள்ள ஐ-கிளவுட்டில் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த வீடியோவை எடுக்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். மேலும், ஆபாச வீடியோவை பதிவு செய்ததாக கூறப்படும் செல்போனில், வீடியோவை அழித்தாலும், அவற்றை கோர்ட்டு அனுமதியுடன் செல்போன் நிறுவனத்திடம் இருந்து திரும்ப எடுக்க முடியும் என தெரிகிறது. இதனால் கோர்ட்டு அனுமதியை பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பா.ஜனதா போராட்டம்

இந்த விவகாரம் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பா.ஜனதா மகளிர் அணியினர் கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தை பா.ஜனதா தீவிரமாக கையில் எடுத்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

போலீஸ் மந்திரி பரமேஸ்வர், இது விளையாட்டு விஷயம், இதை பா.ஜனதாவினா் அரசியலுக்காக பெரிதாக்குகிறார்கள் என்று கூறினார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது.

சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சி.ஐ.டி. விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

"உடுப்பியில் தனியார் கல்லூரி கழிவறையில் மாணவியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்ததாக புகார் உள்ளது. இது உணர்ச்சி வயப்படுகிற வழக்கு என்பதால், கூடுதல் விசாரணைக்காக இந்த வழக்கை சி.ஐ.டி. அமைப்பிடம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உள்ளதால், இந்த வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story