ஜனநாயகம், அரசமைப்பு சட்டத்தை பாஜக பலவீனப்படுத்துகிறது - அசோக் கெலாட் குற்றச்சாட்டு
ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு சட்டத்தை பாஜக, ஆர்.எஸ்.எஸ் பலவீனப்படுத்துவதாக ராஜஸ்தான் முதல்- மந்திரி அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாள் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து நீண்ட தூரம் பயணித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் உறுதியாக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக எங்களது போராட்டம் தொடரும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். அரசியலமைப்பை பாதுகாக்க எங்களால் (காங்கிரஸ்) முடியும். அவர்கள் அரசியலமைப்பை அழித்து ஜனநாயகத்தின் வேர்களை பலவீனப்படுத்துகிறார்கள், அதை நாடு பொறுத்துக்கொள்ளாது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பதவியேற்றதை குறிப்பிட்டு பேசிய கெலாட், 50 ஆண்டுகளில் முதல் முறையாக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவர் எங்கள் கட்சியின் தலைவராகி உள்ளார். நாட்டில் அதற்கான ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.