உ.பி.யில் செப்டம்பர் 22ஆம் தேதி பெண் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சட்டசபை கூட்டம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
செப்டம்பர் 22ஆம் தேதி, சட்டசபை மற்றும் சட்டப்பேரவை கவுன்சில் பெண் உறுப்பினர்களுக்காக அர்ப்பணிக்கப்படும்.
லக்னோ,
உத்தரபிரதேச சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் போது செப்டம்பர் 22ஆம் தேதி, அன்றைய தினம், சட்டசபை மற்றும் சட்டப்பேரவை கவுன்சில், பெண் சட்டசபை உறுப்பினர்களுக்காக அர்ப்பணிக்கப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
பெண் உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் சிறப்பு ஒருநாள் சட்டசபை கூட்டத்தொடர் உத்தரபிரதேசத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
அதன்படி, செப்டம்பர் 22-ம் தேதி நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரின் அமர்வில், 47 பெண் சட்டசபை உறுப்பினர்களும், 6 சட்டப்பேரவை கவுன்சில் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.
இந்த சிறப்பு ஒருநாள் கூட்டத்தில், பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் தன்னம்பிக்கைக்காக மாநில அரசு நடத்தும் மிஷன் சக்தி மற்றும் பிற திட்டங்கள் குறித்து பேச வேண்டும் மற்றும் கால்நடைகளுக்கு பரவிவரும் லம்பி தோல் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்ட பணிகள் பற்றி இரு அவைகளிலும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று பெண் உறுப்பினர்களை முதல் மந்திரி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த நாளை சிறப்பாக கொண்டாட இரு அவைகளிலும் பெண் உறுப்பினரை தலைமை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி சுரேஷ் கன்னாவிடம் ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.