இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட வார்த்தை மோதல்: ஆயுதங்களால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை
இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட வார்த்தைப்போரில் கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா மல்லபுரா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியின் மகன் பிரஜ்வல் (வயது 17). இவர் அங்குள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.யூ.சி. படித்து வந்தார். பிரஜ்வல் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்தார்.. இதற்கிடையே பிரஜ்வலுக்கு பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆனார். அவர்கள் 2 பேரும் குறுந்தகவல்களில் தகவலை பகீர்ந்து கொண்டனர்.
இதற்கிடையே பெண் பெயரில் சில மர்மநபர்கள் போலியான கணக்கு தொடங்கி, குறுந்தகவல் அனுப்பி வந்தது பிரஜ்வலுக்கு தெரியவந்தது. இதனை அறிந்த பிரஜ்வல், உடனே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்ள மர்மநபர்களை திட்டியபடி குறுந்தகவல் அனுப்பினார். இதனால் இன்ஸ்ட்ராகிராம் குறுந்தகவல் மூலம் மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரஜ்வல் அந்த பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 4 பேர் பிரஜ்வலை மடக்கி பிடித்து தாக்கினர்.
அப்போது அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் தான் வைத்திருந்த ஆயுதத்தை கொண்டு பிரஜ்வலை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பிரஜ்வல் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதை பார்த்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்தநிலையில் அக்கம் பக்கத்தினர் பிரஜ்வலை மீட்டு அருகேயுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கித்தூர் போலீசிற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் கித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் அதே பகுதியை சேர்ந்த விஷால் என்பவர் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.