கல்லூரி மாணவ, மாணவி முத்தம் கொடுக்கும் சவால்; கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடகாவில் முத்தம் கொடுக்கும் சவாலை ஏற்று கல்லூரி மாணவர் மற்றும் மாணவி, தனி வீடு ஒன்றில் முத்தம் கொடுத்து கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தட்சிண கன்னடா,
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு நகரில் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதுபற்றி மங்களூர போலீஸ் கமிஷனர் என். சசிகுமார் கூறும்போது, மங்களூருவில் 6 மாதத்திற்கு முன் நடந்த சம்பவமது.
அந்த மாணவர்களில் ஒருவர் கடந்த வாரம் வாட்ஸ்அப்பில் இந்த வீடியோவை போட்டுள்ளார். மாணவர்கள் லிப்-லாக் முத்தம் கொடுக்கும் போட்டி நடத்தி உள்ளனர். உண்மையாகவும், தைரியமுடனும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலான லிப்-லாக் போட்டியை நடத்தி அவர்கள் விளையாடி உள்ளனர்.
இதுபற்றி கல்வி நிறுவன நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. அவர்கள் மாணவ மாணவியர்களை எச்சரிக்கை செய்ததுடன், அவர்களை சஸ்பெண்டும் செய்துள்ளனர் என கூறியுள்ளார்.
இந்த வீடியோவை எடுத்த மாணவர் விசாரணைக்காக போலீசாரால் பிடித்து செல்லப்பட்டு இருக்கிறார். கல்வி நிறுவன அதிகாரிகளோ அல்லது சம்பவத்துடன் தொடர்புடைய பெற்றோரோ எங்களிடம் புகார் எதுவும் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.
அந்த வீடியோவில், கல்லூரி மாணவர் ஒருவர் மற்றும் மாணவி காணப்படுகிறார். வீடு ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில், அறை ஒன்றில் சுற்றியிருக்கும் அவர்கள் இருவரையும் மற்றவர்கள் உற்சாகப்படுத்துகின்றனர். இருவரும் நெருங்கி வந்து லிப்-லாக் முத்தமிட்டு கொள்கின்றனர்.
இந்த லிப்-லாக் போட்டியை மாணவ குழுவினர் அவர்களுக்குள் நடத்தி உள்ளனர் என்றும் தகவல் கூறுகிறது. மாணவ மாணவியர்கள் சீருடையுடன் காணப்படுகின்றனர். இளஞ்ஜோடி ஒன்று ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொள்கின்றனர். மற்றவர்கள் சுற்றி இருக்கின்றனர். மாணவி ஒருவர் தனது சகாவின் மடியில் படுத்து இருக்கிறார். மாணவர்களில் ஒருவர், அடுத்து யார் முத்தமிட வருகிறார்கள் என கூறுகிறார்.
இந்த வீடியோ தட்சிண கன்னடா கடலோர மாவட்டத்தில் வசிக்கும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டி நடத்தும்போது, மாணவர்கள் போதையில் இருந்தனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.