ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களையும் பயங்கரவாதிகள் போல பார்ப்பதா? மத்திய அரசு மீது பாய்ந்த மெகபூபா


ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களையும் பயங்கரவாதிகள் போல பார்ப்பதா? மத்திய அரசு மீது பாய்ந்த மெகபூபா
x
தினத்தந்தி 7 Jan 2024 4:47 PM IST (Updated: 7 Jan 2024 4:55 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகளை நடத்தி சிறைகளை நிரப்பியுள்ளது என்று மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீநகர்,

மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்தி முகமது சயீத்தின் 8-வது நினைவு தினத்தையொட்டி அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அவரது மகளும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நாங்கள் ஒருபோதும் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய மாட்டோம். எங்களிடம் கண்ணியமாக பேசினால், நாங்கள் மரியாதையுடன் பதிலளிப்போம். ஆனால் நீங்கள் தடியடி மூலம் பேசினால், அது இங்கே வேலை செய்யாது.

வடகிழக்கில் மத்திய அரசு பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் சாதாரண மக்களை பயங்கரவாதிகள் போன்று அடையாளப்படுத்துகிறது. கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகளை நடத்தி சிறைகளை நிரப்பியுள்ளது. அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை மூலம் ரெய்டுகள் நடக்கின்றன. யாராவது சொந்த மக்களை இப்படி நடத்துவார்களா?

முப்தி முகமது சயீத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர் மக்களின் இதயங்களை இணைக்க முயன்றார். பிரிவினைவாதிகளும் இந்த நாட்டிற்குள் கண்ணியமாக வாழ வழி செய்தார். அவர் எப்போதும் ஒரே கொடியை மட்டுமே பிடித்துக் கொண்டிருந்தார்." இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்தார்.


Next Story