காமன்வெல்த் : பதக்கங்களை வென்ற விஜய் குமார் யாதவ், சுசீலா தேவிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான (60 கிலோ) ஜூடோவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் விஜய் குமார் யாதவ் சைப்ரஸின் பெட்ரோஸ் கிறிஸ்டோடூலிடைசை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
முன்னதாக மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூவிடம் வீழ்ந்து சுசிலா தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்நிலையில் காமல்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஜூடோவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசீலா தேவிக்கு வாழ்த்துகள். உங்கள் அற்புதமான செயல்திறன் எண்ணற்ற ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. மில்லியன் கணக்கான பெண்களை ஊக்கப்படுத்தியுள்ளது. உங்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது" என்று அதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இதே போல தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், "விஜய் குமார் யாதவ் தனது முதல் காமன்வெல்த் கேம்ஸில் அவரது செயல்திறனால் ஈர்க்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கான 60 கிலோ ஜூடோவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். முந்தைய சுற்றுகளில் உங்கள் மேலாதிக்கம் உங்களுக்கு பதக்கத்தைக் கொண்டு வந்த உங்களின் திறமைகளை வெளிப்படுத்தியது. எதிர்காலத்தில் நீங்கள் மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.