இன்று நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 4 நிறுவனங்கள் இடையே போட்டி


இன்று நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 4 நிறுவனங்கள் இடையே போட்டி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 26 July 2022 10:04 PM IST (Updated: 26 July 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 4 நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது 4 ஜி அலைக்கற்றையே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனை 5 ஜி அலைக்கற்றையாக உயர்த்த தொலை தொடர்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கான சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இச்சோதனைகள் முடிவடைந்ததை தொடர்ந்து 5 ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. 5 ஜி அலைக்கற்றை ஏலத்தைப் பெறுவதற்கு பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இந்த ஏலத்தில் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய 4 நிறுவனங்கள் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

இந்த ஏலத்திற்கான வைப்பு தொகையாக 4 நிறுவனங்களும் ரூ.21 ஆயிரத்து 800 கோடி வரை முன்பணம் செலுத்தியுள்ளன. இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முன்பணம் செலுத்தி உள்ளது. இதனால் இந்த நிறுவனத்திற்கே ஏலம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம் ரூ.5,500 கோடியும், வோடபோன் ஐடியா ரூ.2,200 கோடியும் முன்பணமாக செலுத்தி உள்ளன. அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம் ரூ.100 கோடியும் முன்பணம் செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 4 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏலம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஏலத்தில் நான்கு சுற்றுகள் இன்று முடிவடைந்துள்ளன. நாளை ஐந்தாவது சுற்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5ஜி அலைக்கற்றை சேவை இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என தெரிகிறது. முதலில் பெரு நகரங்களில் அறிமுகமாகும் இச்சேவை அதன்பின், படிப்படியாக பிற நகரங்களிலும் அமலுக்கு வரும். இச்சேவை பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் வீடியோ ஸ்டீரிமிங் வேகம் கணிசமாக உயரும். வீடியோ டவுண்லோடு செய்வதும் எளிதாகும்.


Next Story