பெரு நிறுவனங்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி வரிச்சலுகை - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு


பெரு நிறுவனங்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி வரிச்சலுகை - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

கோப்புப்படம் 

நடுத்தர வர்க்கத்தினருக்கு கூடுதல் வரி விதித்துள்ள மத்திய அரசு, பெரு நிறுவனங்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி வரிச்சலுகையை வாரி வழங்கி உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரு நிறுவனங்களுக்கான (கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான) வரிக்குறைப்பால், பெரு நிறுவன வரி வசூல் உயரும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால், மதிப்பீடுகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 8-ந் தேதி அளித்த அறிக்கையில், பெரு நிறுவனங்களுக்கு 2019-ல் அளித்த வரிச்சலுகையால் அரசுக்கு ரூ.1.84 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி, ஏற்கனவே இருந்து வருகிற பெரு நிறுவனங்களுக்கான வரி விகிதம் 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகவும், புதிய நிறுவனங்களுக்கான வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

எது முக்கியம்?

ஒரு பெருந்தொற்று காலத்தில் பெருநிறுவன வரியை ஆண்டுக்கு சராசரியாக ரூ.92 ஆயிரம் கோடி அளவுக்கு குறைத்து, 2 ஆண்டுகளில் ரூ.1.84 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்துவது முக்கியமா? அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பட்ஜெட்டை 2.26 மடங்கு அதிகரிப்பது முக்கியமா? (2023-ம் ஆண்டுக்கு இந்த திட்ட வேலைவாய்ப்புக்கு பட்ஜெட் மதிப்பு ரூ.73 ஆயிரம் கோடி).

அத்தகைய வரிச்சலுகையை பெரு நிறுவனங்களுக்குத்தான் என மட்டுப்படுத்தியது ஏன்? நடுத்தர வர்த்தகத்தினருக்கு அதிகபட்ச வருமான வரி 30 சதவீதம் (அதுவும் செலவுகளை கழிக்காமல்), ஆனால் பெருநிறுவனங்களுக்கு 22 சதவீதம் வரியா?

வேலை வாய்ப்பு பெருகி இருக்கும்

பெரு நிறுவனங்களுக்கான வரிச்சலுகைக்கு பின்னர், 2020-21 வருமான வரி வசூல் ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 144 கோடி. ஆனால் பெரு நிறுவன வரி வசூல் அதை விட குறைவாக ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 719 கோடிதான்.

2021-22-ம் ஆண்டைப்பொறுத்தமட்டில் பெரு நிறுவன வரிச்சலுகையால் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும். இந்த தொகையைக் கொண்டு அடிமட்டத்தில் உள்ள 20 சதவீத குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்த முடியும். இரண்டில் எது முக்கியம்?

ஆனால் நடுத்தர, குறைவான வருமானம் உள்ள மக்களுக்கு வரிச்சலுகை கொடுத்திருந்தால், அவர்கள் பொருட்களை வாங்கிப்பயன்படுத்துவது (நுகர்வு) அதிகரித்து இருக்கும். இதன்விளைவாக வேலை வாய்ப்பு பெருகி இருக்கும்.

கட்டாய நிபந்தனையா?

பெருநிறுவனங்களுக்கு வரிச்சலுகை தரும் அறிவிப்பு, அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியின் 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியிருந்த 2019 செப்டம்பர் 22-ந் தேதிக்கு சரியாக 2 நாட்கள் முன்பாக அறிவிக்கப்பட்டதே, அமெரிக்கா செல்வதற்கு இது கட்டாய நிபந்தனையா? என்று அவர் கூறினார்.


Next Story