காங்கிரசும், வளர்ச்சியும் ஒன்றாக இணைந்திருக்க முடியாது: பிரதமர் மோடி


காங்கிரசும், வளர்ச்சியும் ஒன்றாக இணைந்திருக்க முடியாது:  பிரதமர் மோடி
x

சத்தீஷ்காரின் அடையாளம், பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் பிற்பட்டோர் பிரிவுகள் வலுப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் குறிக்கோள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

காங்கர்,

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 9-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி சத்தீஷ்காரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில் முதல் கட்டத்தில் 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்டத்தில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஷ்காரில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு இன்று பேசும்போது, பா.ஜ.க.வுக்கு பெரிய ஆதரவு உள்ளது. அதனை காங்கரில் காண முடிகிறது. சத்தீஷ்காரில் காங்கிரஸ் கட்சி ஊழலில் ஈடுபடுகிறது. அவர்களுடைய தலைவர்கள் சொந்த நலனுக்காக வேலை செய்கிறார்கள் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

காங்கிரசும், வளர்ச்சியும் ஒன்றாக இணைந்திருக்க முடியாது என குறிப்பிட்ட அவர், சத்தீஷ்காரின் அடையாளம், பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் பிற்பட்டோர் பிரிவுகள் வலுப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் குறிக்கோள் என்றும் பேசியுள்ளார்.

சத்தீஷ்காரின் மக்கள் மற்றும் பா.ஜ.க. சேர்ந்து மாநில உருவாக்கத்திற்காக பணியாற்றினார்கள். ஆனால், காங்கிரசார் ஆட்சியில் இருந்தவரை பா.ஜ.க.வுடன் மோதலில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். எனினும், நாங்கள் மாநில வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். இந்த தேர்தல் உங்களுக்கான மற்றும் உங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்கான தேர்தல் என்று அவர் பேசியுள்ளார்.


Next Story