இன்னும் கொஞ்சம் வேலை செய்திருந்தால் ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்: சச்சின் பைலட்


இன்னும் கொஞ்சம் வேலை செய்திருந்தால் ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்: சச்சின் பைலட்
x
தினத்தந்தி 6 Feb 2024 12:22 PM GMT (Updated: 6 Feb 2024 12:28 PM GMT)

அரசு மதம் சார்ந்த விசயங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று சச்சின் பைலட் கூறினார்.

புதுடெல்லி,

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக பணி செய்திருந்தால், தனது கட்சி வெற்றி பெற்றிருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். தனக்கும் முன்னாள் முதல்- மந்திரி அசோக் கெலாட்டுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களையப்பட்டுவிட்டதாகவும் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோக்மத் தேசிய மாநாட்டில் பேசிய பைலட் கூறியதாவது,

ராஜஸ்தானில் காங்கிரசின் போட்டி எதிர்பார்ப்பை எற்படுத்தியது. இருப்பினும் நாங்கள் வெற்றி பெறவில்லை. ராஜஸ்தானில் எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தேன். நாங்கள் வேறு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருந்தால், வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருந்திருக்கும்.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஒவ்வொருவரும் தங்கள் மதம் சார்ந்த நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் அதில் அரசியல் ஆதாயம் பெறுவது தவறு. அரசு, மதம் சார்ந்த விசயங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டது. ராமர் கோவில் கட்டப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் யாரையெல்லாம் அழைப்பது என்பதை முடிவெடுப்பது யார்? நாங்கள் எல்லாம் ராமரின் பக்தர்கள் இல்லையா? எனக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை.

ராமரை நாம் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். அதை மற்றவர்கள் கட்டாயப்படுத்த முடியாது. ராமர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்.

பா.ஜ.க, தங்களுடைய எத்தனை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் குடும்பத்தினர் அரசியலில் உள்ளனர் என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். பா.ஜ.க.வும், பிரதமரும் காங்கிரசை விமர்சிக்க மட்டுமே விரும்புகிறார்கள்.

காங்கிரஸ் ஜனநாயக முறைப்படி மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. அதேபோல், ஜே.பி.நட்டாவை தலைவராக தேர்ந்தெடுக்க பா.ஜ.க தேர்தல் நடத்தியதா? கடந்த 30 ஆண்டுகளில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் முதல்வராகவோ, பிரதமராகவோ இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸின் குடும்ப அரசியல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த சச்சின் பைலட், ' பிரதமர் காங்கிரசின் மீது ஆவேசப்பட்டுள்ளார். இது மக்களவையில் பிரதமரின் கடைசி உரை. அவர் உலகிற்கு நல்ல செய்தியை வழங்குவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் பிரதமர் பெண்கள் மற்றும் இளைஞர்கள் நலன் பற்றி பேசாமல் காங்கிரஸைப் பற்றி பேசியுள்ளார்' என தெரிவித்தார்.


Next Story