மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் 2 வேட்பாளர்களை நிறுத்தியது


மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் 2 வேட்பாளர்களை நிறுத்தியது
x

கர்நாடகத்தில் 4 இடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ள நிலையில் 2 இடங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அவர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பெங்களூரு:

4 இடங்களுக்கு தேர்தல்

நாடாளுமன்றம் மாநிலங்களவையில் காலியாகும் 57 உறுப்பினர் இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தோ்தல் நடக்கிறது. கர்நாடகத்தில் இருந்து 4 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில், மாநிலங்களவைக்கு பா.ஜனதா சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்‌கேஷ் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். பெங்களூரு விதான சவுதாவில் தேர்தல் அதிகாரியான சட்டசபை சபாநாயகர் விசாலாட்சியிடம் அவர் மனு தாக்கல் செய்தார்.

மேலும் 4-வது இடத்திற்கு அக்கட்சி சார்பில் மன்சூர் கான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தாக்கலின்போது, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே ஆகியோர் உடன் இருந்தனர். மன்சூர்கான் மறைந்த மத்திய மந்திரி ரகுமான்கானின் மகன் ஆவார்.

நிர்மலா சீதாராமன்

மனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். இன்று பா.ஜனதா சார்பில் வேட்பாளர்கள் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்கிறார்கள். பெரும்பான்மை வாக்குகள் இல்லாத போதும் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் 4-வது இடத்திற்கு குபேந்திரரெட்டி வேட்பாளராக களம் இறக்கப்படுகிறார். 4-வது இடத்திற்கு எந்த கட்சியிடமும் போதுமான வாக்குகள் இல்லை.

சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜனதாவுக்கு மொத்தம் 121 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதன்படி அக்கட்சிக்கு 2 இடங்கள் கிடைப்பது உறுதி. காங்கிரஸ் வசம் 60 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அக்கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும். ஜனதா தளம் (எஸ்) கட்சியில் 32 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சபாநாயகர், சுயேச்சை உறுப்பினர் என 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

சித்தராமையா எதிர்ப்பு

ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகள் தேவை. அதன்படி பா.ஜனதாவின் 2 வேட்பாளர்கள், காங்கிரசின் ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற முடியும். பா.ஜனதா மற்றும் காங்கிரசின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஆதரிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. சமீபத்தில் சித்தராமையாவை குமாரசாமி கடுமையாக விமர்சித்தார். அதனால் அக்கட்சியை ஆதரிப்பதை சித்தராமையா கடுமையாக எதிர்த்தார். மேலும் காங்கிரஸ் ஓட்டுகள் பிறகட்சிகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் 4-வது இடத்திற்கு காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவும் அவர் வலியுறுத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

4-வது இடத்திற்கு போட்டி

இதையடுத்து 4-வது இடத்திற்கு வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல் ஆளும் பா.ஜனதாவும் வேட்பாளரை நிறுத்தும் முடிவில் உள்ளது. அக்கட்சி 4-வது இடத்திற்கு கே.சி.ராமமூர்த்தி எம்.பி.யை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

அதனால் 4-வது இடம் யாருக்கு கிடைக்கும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தோ்தலில் போட்டி இருக்கும் என்பதால் ஓட்டுப்பதிவு நடைபெறுவது உறுதி என்று சொல்லப்படுகிறது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

ஜனதா தளம் (எஸ்) கட்சியில் ஏற்கனவே ஜி.டி.தேவேகவுடா உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் வேறு கட்சிகளுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Next Story