பீகாரில் காங்கிரசுக்கு 4 மந்திரி பதவிகளாவது வழங்கியிருக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ஆதங்கம்
பீகாரில் காங்கிரசுக்கு 4 மந்திரி பதவிகளாவது வழங்கியிருக்க வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார்.
இந்த ஆட்சியில் கட்சிகளுக்கு மந்திரி பதவி ஒதுக்கீடு குறித்து நேற்று கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், 'பீகாரில் அமைந்துள்ள புதிய ஆட்சியின் மந்திரி பதவி ஒதுக்கீட்டில் காங்கிரசுக்கு நியாயம் செய்யப்படவில்லை.
இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு அதிக மந்திரி பதவிகள் கிட்டியுள்ளன. 79 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள ராஷ்டிரீய ஜனதா தளத்துக்கு 17 மந்திரி பதவிகளும், சுயேச்சை உள்ளிட்ட 46 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள ஐக்கிய ஜனதா தளத்துக்கு முதல்-மந்திரி உள்பட 13 மந்திரி பதவிகளும், நான்கே எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு ஒரு மந்திரி பதவியும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 19 எம்.எல்.ஏ.க்களை கொண்டிருக்கும் காங்கிரசில் 2 பேருக்குத்தான் மந்திரி பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
எங்களுக்கு குறைந்தபட்சம் 4 மந்திரி பதவிகளாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வழங்கியிருந்தால், எங்களால் முற்பட்ட வகுப்பினருக்கும் மந்திரி பொறுப்பை வழங்கியிருக்க முடியும். அந்த சமூகங்களின் அதிருப்தியை சம்பாதித்திருக்க வேண்டியிருந்திருக்காது.
பீகாரில் புதிய ஆட்சியில் எந்த அர்த்தமுமின்றி மந்திரி பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரசுக்கு நியாயமான ஒதுக்கீட்டுக்கு கட்சியில் இருந்து யாரும் அழுத்தம் கொடுக்காதது ஆச்சரியம்தான்' என்று கூறியுள்ளார்.