மேகதாது பாதயாத்திரை சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட காங். தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்
கொரோனா விதிமீறி மேகதாது பாதயாத்திரை மேற்கொண்ட சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது பதிவான 9 வழக்குகளை வாபஸ் பெற கர்நாடக மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பெங்களூரு:-
வழக்குகள் வாபஸ்
இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராமநகர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள 9 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அதாவது, மேகதாது திட்டத்திற்காக காங்கிரசால் நடத்தப்பட்ட பாதயாத்திரையின்போது, கொரோனா விதிமீறல் குறித்து டி.கே.சிவக்குமார், சித்தராமையா, டி.கே.சுரேஷ் எம்.பி. உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அது தொடர்பான 9 வழக்குகளை வாபஸ் பெற மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பணி நீக்கம்
மேலும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
வணிக வரித்துறை உதவி இயக்குனர் நாகேஸ் பணம் தவறாக பயன்படுத்தியதாக அவருக்கு கோர்ட்டு5 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்துள்ளது. இதையடுத்து அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க முடிவு செய்துள்ளோம். சுகாதாரத்துறையில் பெங்களூருவில் பணியாற்றி வரும் டாக்டர் உஷா கொந்தரகி என்பவர் லஞ்சம் வாங்கும்போது லோக்அயுக்தாவின் வலையில் சிக்கினார். இலாகா விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வளா்ச்சி ஆணையம்
அதே போல் சித்ரதுர்காவை சேர்ந்த டாகடர் நாகமணி, லஞ்சம் வாங்கும்போது லோக்அயுக்தாவில் சிக்கினார். அவர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் விமானவியல், பாதுகாப்பு உயர் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.391 கோடி இதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பெலகாவி மருத்துவ அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.140 கோடி பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்கப்படுகிறது. அவற்றுக்கு கூடுதலாக ரூ.34 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடலோர பகுதி வளர்ச்சி ஆணையம் என்ற பெயர் வாரியம் என்று மாற்றப்படுகிறது. இதில் உடுப்பி, சிக்கமகளூரு, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மூன்று மாவட்டங்களில் 23 தாலுகாக்கள் மலைநாடு வளா்ச்சி வாரியத்தில் உள்ளது. அந்த பகுதிகளை நாங்கள் கடலோர வளா்ச்சி வாரியத்திற்குள் சேர்த்துள்ளோம்.
ஜி.பி.எஸ். கருவிகள்
கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களுக்காக காத்திருக்கும் நேரம் குறையும். விபத்துகள் தடுக்கப்படும். சுகாதாரத்துறையில் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதிகளை
அரசு-தனியார் பங்களிப்பில் ரூ.47 கோடி செலவில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சைபர் பாதுகாப்பு கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், கர்நாடகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த கொள்கையை அரசு கொண்டு வந்துள்ளது.
ஊட்டச்சத்து உணவு
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில் ஊட்டச்சத்து உணவு தயாரிக்க பாமாயிலுக்கு பதிலாக சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.66 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்காக டெண்டர் விடப்படும். இதற்கு கூடுதலாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி சட்டத்தை மாநிலத்தின் பிற மாநகராட்சிகளுக்கும் விஸ்தரிப்பது குறித்து மந்திரிசபை துணை குழு அமைக்கப்படுகிறது. இந்த துணை குழுவை முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்வார். காண்டிராக்டர்கள் அரசு மீது சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். பணிகள் நடைபெற்றதா? இல்லையா? என்பதை அறியவே அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுளளது. அரசின் மீதான காண்டிராக்டர்களின் கமிஷன் குற்றச்சாட்டை கண்டிக்கிறேன்.
இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.