பிரதமராக மோடி இருக்கும் வரை கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர சாத்தியமில்லை; முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
பிரதமராக மோடி இருக்கும் வரை கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு சாத்தியமில்லை என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் தொட்டபள்ளாப்புராவில் நடந்த பா.ஜனதாவின் சாதனை விளக்க மாநாட்டில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-
எதிர்க்கட்சியாக இருக்க தயார்படுத்தி...
நான் இதற்கு முன்பும் பல முறை கூறி இருக்கிறேன், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது. இந்த சாதனை விளக்க மாநாட்டிலும் கூறுகிறேன், கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் கனவு நிறைவேறாது. ஆட்சியை பிடித்து விடுவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கனவு காண வேண்டாம். எதிர்க்கட்சியாகவே தொடர்ந்து இருக்க காங்கிரஸ் தலைவர்கள் இப்போதில் இருந்தே தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
நாட்டில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. கர்நாடகத்தில் மட்டும் கொஞ்சம் காங்கிரஸ் கட்சி உயிரோடு உள்ளது. அதுவும் அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலுடன் கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விடும். சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கே வந்து விட்டது போன்று பேசி வருகிறார்கள்.
ஆட்சிக்கு வர சாத்தியமில்லை
பண பலத்தின் மூலமாக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் காலம் எப்போதோ முடிந்து விட்டது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மக்கள் நல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. நாட்டில் வளர்ச்சி பணிகள் பா.ஜனதா ஆட்சியில் தான் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும்
ஆட்சியை பிடிப்பது உறுதி. இதனை தடுக்க யாராலும் சாத்தியமில்லை. பெங்களூரு மழை பாதிப்பு குறித்தும், பா.ஜனதா அரசும் கீழ்மட்டமாக பேசி வருகிறார்கள்.
சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரசுக்கு, பா.ஜனதாவினர் தக்க பதிலடி கொடுப்பார்கள். பா.ஜனதா அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி ஆட்சிக்கு வந்து விடலாம் என்று சித்தராமையா நினைக்கிறார். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். சித்தராமையாவுக்கு சவால் விடுகிறேன், கர்நாடகத்தில் காங்கிரசை ஆட்சிக்கு வருவதற்கு பா.ஜனதா விடுவதில்லை. பிரதமராக மோடி இருக்கும் வரை கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வருவதற்கு சாத்தியமில்லை.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.