முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் காங்கிரஸ் தலைவரின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை!
இதனையடுத்து, தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக இன்று கூறினார்.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினமான இன்று, நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தி பதிவிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் சர்ச்சைக்குரிய கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு பின்னர் அதை நீக்கியுள்ளார்.
ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை கொண்ட டுவிட்டர் பதிவில், "ஒரு பெரிய மரம் விழும் போது, நிலமே அதிரும்" என வாசகத்தை வைத்து அவர் டுவீட் செய்தார்.
இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அது சில நிமிடங்களில் அவரது கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ராஜீவ் காந்தியின் தாயாரும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தி, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 2,000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய ராஜீவ் காந்தி, "ஒரு பெரிய மரம் விழும் போது, நிலம் சற்று ஆட்டம் காணத்தான் செய்யும்" என கருத்து தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இது சீக்கியர்களின் படுகொலையை நியாயப்படுத்தும் கருத்து என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. பல ஆண்டுகள் கழித்தும், ராஜீவ் காந்தியின் இந்த கருத்து பழிச்சொல்லாக விடாமல் துரத்துகிறது.
இந்த நிலையில், இந்த வாசகங்களை ராஜீவ் நினைவு தின அஞ்சலிக்காக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிவிட்டது கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக இன்று கூறினார். இது தொடர்பாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த டுவீட்டில் உள்ள கருத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை வைத்து எனக்கு எதிராக மோசமான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.