காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்க உத்தரவு ரத்து
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி நிறைவு பெற்றது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கின.
இதனிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
அதேவேளை, பிரதமர் மோடியை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் தான் பேசவில்லை என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்தார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நாடாளுமன்ற உரிமைக்குழு பரிந்துரை அனுப்பியது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதையடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.