'காங்கிரஸ் கட்சி அதிக மாநில அரசுகளை கவிழ்த்து சாதனை படைத்துள்ளது' - ராஜ்நாத் சிங்
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாட்டில் 90 முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"காங்கிரஸ் கட்சி அதிக மாநில அரசுகளை கவிழ்த்து சாதனை படைத்துள்ளது. சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி நாட்டில் இதுவரை 132 முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 90 முறை காங்கிரஸ் ஆட்சியில்தான் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்திரா காந்தி ஒருவர் மட்டுமே 50 அரசுகளை கவிழ்த்து சாதனை படைத்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் மோடியால் கவிழ்க்கப்பட்ட ஒரு அரசாங்கத்தையாவது உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா? அவ்வாறு ஒன்று கூட இல்லை. அவசரநிலையை அமல்படுத்தி காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை படுகொலை செய்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.
ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, எந்த பின்புலமும் இல்லாமல், தனது சொந்த திறமையால் முன்னேறியவர் இந்த நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்கப் போகிறார். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் பலம். இந்த தேர்தல் இந்திய ஜனநாயகத்தின் பலம் மற்றும் நம்பகத்தன்மைக்கு சான்றாக விளங்கும்."
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.