சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு: பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

காங்கிரசார் போராட்டம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு அமலாக்கத்துறை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து அவரிடம் இன்று விசாரணை நடந்தது. இதனை காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். அதே போல் கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்திய அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்துவதாக கூறி மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் காங்கிரசார் சுதந்திர பூங்காவில் இருந்து கவர்னர் மாளிகை வரை ஊர்வலமாக சென்றனர்.

தலைவர்கள் கைது

அந்த ஊர்வலம் அரண்மனை ரோட்டின் அருகே வரும்போது போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து அரண் அமைத்து இருந்தனர். அதை தாண்டி காங்கிரசார் ஊர்வலம் செல்ல முயற்சி செய்தனர். அப்போது காங்கிரஸ் தலைவருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது.

இதையடுத்து டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர்.

பா.ஜனதா கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் போராட்டத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் மகேஷ் தெங்கினிகாயி கூறுகையில், 'நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை முன்பு சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். காங்கிரசார் நடத்தும் போராட்டத்தை நாங்கள் கண்டிக்கிறோம்' என்றார்.

இரும்பு தடுப்பு மீது ஏறி தாண்டி குதித்த டி.கே.சிவக்குமார்

காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திர பூங்காவில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது இருப்பு தடுப்புகளை அமைத்து போலீசார் காங்கிரசாரை தடுத்து நிறுத்தினர். அந்த சமயத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், போலீசார் அமைத்த இரும்பு தடுப்புகள் மீது ஏறி அதனை தாண்டி குதித்தார். அப்போது அவர் கையில் காங்கிரஸ் கொடியை ஏந்திருந்தார். அவரை தொடர்ந்து சில காங்கிரஸ் தலைவர்களும் இரும்பு தடுப்புகள் மீது ஏறி தாண்டி குதித்தனர்.

கார்களுக்கு தீவைப்பு

போராட்டத்தின்போது காங்கிரசார் சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காருக்கு தீ வைத்தனர். அந்த கார் எரிந்து நாசமானது. அந்த காருக்கு அருகில் நின்றபடி காங்கிரஸ் நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் வில்சன் கார்டன் போலீசார் விரைந்து வந்து காருக்கு தீ வைத்த காங்கிரசாரை கைது செய்து அழைத்து சென்றனர். இதேபோல், சேஷாத்திரிபுரத்தில் நின்ற ஒரு காருக்கும் காங்கிரசார் தீவைத்தனர்.


Next Story