மோடி அரசு மீது ஒரு பக்க குற்றப்பத்திரிகை ஆவணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது


மோடி அரசு மீது ஒரு பக்க குற்றப்பத்திரிகை ஆவணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது
x

மோடி அரசு மீது ஒரு பக்க அளவிலான குற்றப்பத்திரிகை ஆவணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி குற்றப்பத்திரிகை

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மீது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.

இந்த நிலையில், 'பிரஷ்ட் ஜூம்லா பார்ட்டி' (ஊழல் ஜூம்லா கட்சி) என்ற தலைப்பில், மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள அரசின்மீது ஒரு பக்க அளவிலான குற்றப்பத்திரிகை ஆவணத்தை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

இதை வெளியிட்டு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "மோடி அரசின் தவறான ஆட்சி குறித்து நாங்கள் இன்றைக்கு குற்றப்பத்திரிகை வெளியிட்டு இருக்கிறோம். தேவைப்பட்டால், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் மீதான குற்றப்பத்திரிகையை மாநில காங்கிரஸ் கமிட்டிகள் வெளியிடும்" என குறிப்பிட்டார்.

குற்றப்பத்திரிகையில் கூறி இருப்பது என்ன?

இந்த குற்றப்பத்திரிகை 3 பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அதில் 'குச் கா சாத' (ஒரு சிலரின் நலனுக்காக) என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதில், குறிப்பிட்ட சில தொழில் அதிபர்களுக்கு மட்டும் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன; 10 சதவீத பணக்காரர்கள், நாட்டின் 64 சதவீத செல்வ வளத்தைக் கொண்டுள்ளனர்; துறைமுகங்களும், விமான நிலையங்களும் பிரதமரின் நெருங்கிய நண்பர்களுக்கு பரிசுகளாக தாரை வார்க்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.

2-வதாக 'கூத் கா விகாஸ்' (சுய வளர்ச்சி) என்ற பிரிவில், பா.ஜ.க. தன்முனைப்பு பிரசாரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்கிறது, நெருக்கமானவர்களுக்கு மட்டுமே சாதகமாக செயல்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

3-வது பிரிவில், வேலையில்லா திண்டாட்டம், உணவு பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளின் துன்பங்கள், வெறுப்புணர்வு பேச்சுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்த்தல், பல்வேறு துறைகளில் இந்தியாவின் சர்வதேச தர வரிசை குறியீடுகள் பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

ராகுல் யாத்திரை

கே.சி. வேணுகோபால் தொடர்ந்து கூறியதாவது:-

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. யாத்திரை ஜம்முவுக்குள் 19-ந் தேதி நுழைந்துள்ளது. 25-ந் தேதி வரை ஜம்முவில் இருப்போம். 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை யாத்திரை காஷ்மீரில் நடக்கும். 30-ந் தேதி யாத்திரை நிறைவு அடையும். இந்த யாத்திரை மாபெரும் வெற்றி காணச் செய்ததற்காக நாங்கள் நாட்டின் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த யாத்திரை நாட்டின் மாபெரும் இயக்கமாக பரிணமித்து இருக்கிறது.

மோடி அரசின் தவறான ஆட்சியால் மக்கள் அடைகிற கஷ்டங்களின் வலியை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி.யை மோசமான வகையில் அமல்படுத்தியதும் சாதாரண மக்களின் வாழ்க்கையை துயரமாக்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

யாத்திரையின் 2-வது கட்டம்

இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-வது கட்டமாக காங்கிரஸ் கட்சி 'ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான்' என்ற பெயரில் (கைக்கு கை பிரசாரம்) மேற்கொள்ளும் யாத்திரைக்கான சின்னத்தையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

26-ந் தேதி தொடங்க உள்ள இந்த யாத்திரையின்போது, இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றி ராகுல் காந்தி எழுதிய கடிதத்தையும், மோடி அரசு மீது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள குற்றப்பத்திரிகையையும் மக்களுக்கு வினியோகிப்போம் என்று கே.சி.வேணுகோபால் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

"ஹாத் சே ஹாத் ஜோடோ அபியான் யாத்திரையின் இலக்கு, மோடி அரசின் தோல்வியை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான். இது 100 சதவீதம் அரசியல் பிரசார இயக்கம்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story