அமெரிக்காவிடம் இருந்து அதிக விலை கொடுத்து டிரோன் வாங்குவது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
இந்தியாவில் குறைந்த விலையில் தயாரிக்க முடியும் என்கிறபோது, அமெரிக்காவிடம் இருந்து அதிக விலை கொடுத்து டிரோன் வாங்குவது ஏன்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்காவிடம் இருந்து நமது ஆயுத படைகளுக்கு '31 எம்.கியூ.-9பி பிரிடேட்டர் யு.ஏ.வி. ' டிரோன்களை வாங்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அதிநவீன டிரோன்கள் விலை தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மத்திய ராணுவ அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ள டிரோன்கள் விலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இவற்றை கொள்முதல் செய்வதற்கு முன்பாக பிற நாடுகளுக்கு இந்த டிரோன்கள் என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்து ஆராயப்படும் என கூறப்பட்டிருந்தது.
நாட்டின் பாதுகாப்பு முதன்மையானது
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, டெல்லியில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் பாதுகாப்பு முதன்மையானது. அதே நேரத்தில், அமெரிக்காவிடம் இருந்து பிரிடேட்டர் டிரோன்கள் வாங்குவதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
குறைந்த விலையில் தயாரிக்கலாம்
பிரிடேட்டர் டிரோன் பேரத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை தேவை. முக்கிய கேள்விகளுக்கு நாடு பதில்களை எதிர்பார்க்கிறது. 31 எம்.கியூ.-9பி பிரிடேட்டர் யு.ஏ.வி. ரோன்களை வாங்க 3.072 பில்லியன் டாலர் (சுமார் ரூ.25 ஆயிரத்து 200 கோடி) விலை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு பிரிடேட்டர் டிரோன் விலை ரூ.812 கோடி. 31 டிரோன்கள் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் கோடி கொடுக்கப்பட உள்ளது. ஆனால் இந்த டிரோன்களை உள்நாட்டில் டி.ஆர்.டி.ஓ. அமைப்பு 10 முதல் 20 சதவீத செலவிலேயே உருவாக்க முடியும்.
ஏன் அதிக விலை?
இந்த டிரோன் பேரத்தை இறுதி செய்தில் பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டம் ஏன் கூட்டப்படவில்லை? பிற நாடுகளை விட அதிக விலையை ஏன் இந்தியா கொடுக்கிறது? எதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டும்? என்று அவர் கூறினார்.