கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை - அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நடத்துகிறது. அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி,
அடுத்த நாடாளுமன்ற தேர்தல், 2024-ம் ஆண்டு நடக்க உள்ளது. அதற்குள் காங்கிரஸ் கட்சி தன்னை புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாட்டில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 'பாரத் ஜோடோ யாத்திரை "(ஐக்கிய இந்தியா யாத்திரை) என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி மக்களை சந்திக்க முடிவு செய்தது.
இந்த யாத்திரை அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சித்தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று மேலும் கூறியதாவது:-
இதே நாளில் 80 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியின் தலைமையிலும், உத்வேகத்திலும் இந்திய தேசிய காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது. அதன்பின்னர் 5 ஆண்டுகள் கழித்து நாடு சுதந்திரம் பெற்றது.
இன்று இந்திய தேசிய காங்கிரஸ், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது. இது 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய பாத யாத்திரை ஆகும். இது 3,500 கி.மீ. தொலைவிலானது. 150 நாட்களில் இந்த யாத்திரை நிறைவு அடையும்.
பயம், மதவெறி, பாரபட்சம், வாழ்வாதாரத்தை அழிக்கும் பொருளாதாரம், பெருகிவரும் வேலையின்மை, வளர்ந்து வரும் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு மாற்றாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்குமாறு, ஒரு மாபெரும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் அனைவரையும் காங்கிரஸ் கட்சி அழைக்கிறது என்று அவர் கூறி உள்ளார்.