கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.100 கோடி செலவிட பா.ஜனதா திட்டம் - சித்தராமையா


கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.100 கோடி செலவிட பா.ஜனதா திட்டம் - சித்தராமையா
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.100 கோடி செலவிட பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

ஊழல் ஜனதா கட்சி

பா.ஜனதா என்றால் ஒரு ஊழல் கட்சியாகும். ஊழல் ஜனதா கட்சி என்று தான் அழைக்க வேண்டும். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற ஊழல் அரசை நான் பார்த்ததில்லை. பா.ஜனதா ஒரு பொய் தொழிற்சாலை ஆகும். பிரதமர் மோடி, அமித்ஷா, பசவராஜ் பொம்மை, நளின்குமார் கட்டீல் வாயில் இருந்து வருவது பொய் மட்டுமே. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கூடுதல் டி.ஜி.பி., மாவட்ட கலெக்டர் சிறைக்கு சென்று இருக்கிறார்கள்.

இதை விட இந்த ஆட்சியில் ஊழல் நடப்பதற்கு வேறு சாட்சிகள் தேவையா?. ஈசுவரப்பா பெயரை எழுதி வைத்து விட்டு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்திருந்தார். தற்போது ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ. வீட்டில் ரூ.6 கோடி சிக்கி இருக்கிறது. மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தில் டெண்டர் எடுக்க கோடிக்கணக்கான ரூபாயை மாடால் விருபாக்ஷப்பா லஞ்சமாக பெற்றிருக்கிறார்.

ரூ.100 கோடி செலவு

இதற்கு பொறுப்பு ஏற்று முதல்-மந்திரி பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்ய வேண்டும். மாடால் விருபாக்ஷப்பாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த ஆட்சியில் பெறும் லஞ்ச பணத்தின் மூலமாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பா.ஜனதாவினர் திட்டமிடுகின்றனர். சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடியை செலவு செய்ய பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர்.

மாநில மக்கள் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். மக்களுக்கு எதிரான இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல் முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.

அமித்ஷாவிடம் இருந்து பாடம்...

எனது தலைமையிலான அரசு காங்கிரஸ் மேலிடத்திற்கு ஏ.டி.எம். போல் இருந்தது என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறி இருந்தார். தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டில் சிக்கிய ரூ.6 கோடிக்கு அமித்ஷா என்ன பதில் சொல்ல போகிறார். இதை விட பெரிய சாட்சி அமித்ஷாவுக்கு தேவையா?. சிறைக்கு சென்று வந்த அமித்ஷாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டுமா?. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மதிப்பளிக்க, பிரதமர் மோடியிடம் இருந்து கற்க வேண்டிய அவசியமில்லை.

எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை புறக்கணித்தது பற்றி மோடி பேசாமல் இருப்பது ஏன்?. முன்னாள் மத்திய மந்திரி அனந்தகுமாரின் மனைவிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காமல் இருந்தது பா.ஜனதா தான் என்பதை மறந்து விடக்கூடாது. முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கியதால், அவர் கண்ணீர் விட்டு அழுதார். தற்போது ஓட்டுககாக எடியூரப்பாவை புகழ்கின்றனர்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story