டெல்லியில் வருகிற 2-ந்தேதி காங்கிரஸ் முக்கிய ஆலோசனை
கா்நாடக காங்கிரசில் அதிருப்தி எழுந்துள்ள நிலையில் வருகிற 2-ந்தேதி அக்கட்சியின் முக்கியமான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
பெங்களூரு:
கா்நாடக காங்கிரசில் அதிருப்தி எழுந்துள்ள நிலையில் வருகிற 2-ந்தேதி அக்கட்சியின் முக்கியமான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
கடும் ஏமாற்றம்
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பி.கே.ஹரிபிரசாத் எம்.எல்.சி. முந்தைய பா.ஜனதா ஆட்சியில் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்தது. இந்த அரசில் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பி இருந்தார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.
அவர் சார்ந்த ஈடிகா சமூகத்தை சேர்ந்த மது பங்காரப்பாவுக்கு மந்திரி பதவி கிடைத்தது. இதையடுத்து பி.கே.ஹரிபிரசாத் கடும் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவ்வப்போது முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராக அவர் தனது அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பி.கே.ஹரிபிரசாத், தனக்கு ஒருவரை முதல்-மந்திரி பதவியில் அமர்த்தவும் தெரியும், அந்த பதவியில் இருந்து கீழே இறக்கவும் தெரியும் என்று பேசினார். அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
மேலும் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், மந்திரிகள் மீது எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மந்திரிகள் தங்களை மதிப்பது இல்லை என்றும், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை என்றும் புகார் கூறினர். தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வதாக சில எம்.எல்.ஏ.க்கள் எச்சரிக்கை விடுத்தனர். கர்நாடக காங்கிரசில் நடைபெற்று வரும் இத்தகைய கருத்து வேறுபாடுகளால் கட்சி மேலிடம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இந்த நிலையில் வருகிற 2-ந் தேதி டெல்லியில் காங்கிரஸ் மேலிடத்தின் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றும்படி கட்சி மேலிட தலைவர்கள் அவர்களுக்கு அறிவுறுத்த உள்ளனர்.