ஏழைகளின் போராட்டம், வலியை காங்கிரஸ் ஒருபோதும் புரிந்து கொள்ளாது: பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு முறை என்னை திட்டும்போதும், அக்கட்சி அழிந்து போகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பேரணி, கட்சி பொது கூட்டம் மற்றும் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடகாவில் பிதார் மாவட்டத்தில் ஹம்னாபாத் நகரில் நடந்த பொது கூட்டத்தில் பா.ஜ.க. சார்பிலான தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார். அவர் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின்போது, ஏழைகளின் போராட்டம் மற்றும் வலியை காங்கிரஸ் ஒருபோதும் புரிந்து கொள்ளாது.
பா.ஜ.க. பல பெண்களுக்கு வீட்டின் சொந்தக்காரர்களாகும் உரிமையை வழங்கி உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியால் அந்த திட்டத்தின் வேகம் குறைக்கப்பட்டது. அக்கட்சி மீண்டும் என்னை திட்ட தொடங்கி உள்ளது. ஒவ்வொரு முறை என்னை திட்டும்போதும், அக்கட்சி அழிந்து போகிறது. காங்கிரஸ் என்னை 91 முறை திட்டியிருக்கிறது.
அவர்கள் திட்டி விட்டு போகட்டும். கர்நாடக மக்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றி கொண்டிருப்பேன் என அவர் பேசியுள்ளார்.
சமீபத்தில், கர்நாடகாவின் கலபுரகியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசும்போது, பிரதமர் மோடியை விஷ பாம்பு என கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி, தெலுங்கானா பா.ஜ.க. பொறுப்பு வகிக்கும் தருண் சக், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்கும் வகையிலான பேச்சுகளை ஒருவரும் வெளியிட கூடாது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், தனிநபர் வாழ்க்கை பற்றிய அனைத்து விமர்சனங்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் உயரிய நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை மீறி உள்ளார்.
அதனால், தேர்தல் ஆணையம் இதில் தலையிட வேண்டும் என்று அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்து உள்ளார். சமீபத்தில் கூட, பிரதமர் மோடியின் புதைகுழி தோண்டப்பட்டு வருகிறது என்றும், அவரை நூறு தலை ராவணன் என்றும் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.