கர்நாடக முதல்-மந்திரி பதவி விஷயத்தில் காங்கிரஸ் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவேன் - டி.கே.சிவக்குமார்


கர்நாடக முதல்-மந்திரி பதவி விஷயத்தில் காங்கிரஸ் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவேன் - டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 6 May 2023 10:00 PM GMT (Updated: 6 May 2023 10:00 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மோடியின் செல்வாக்கு

பிரதமர் மோடி எந்த விதமான வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. அதனால் இந்த முறை நடைபெறும் கா்நாடக சட்டசபை தேர்தலில் மோடியின் செல்வாக்கு எடுபடாது. மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட அம்சங்களை குறிப்பிட்டுள்ளது. பா.ஜனதா தார்மிக ரீதியில் திவாலாகிவிட்டது.

எனக்கும், சித்தராமையாவுக்கும் இடையே மோதல் இருப்பதாக பா.ஜனதா தவறான தகவலை பரப்புகிறது. நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். நாங்கள் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்தியுள்ளோம்.

நான் கட்டுப்படுவேன்

கடந்த 3 ஆண்டுகளில் நாங்கள் ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் கட்சி பணியாற்றியுள்ளோம். முதல்-மந்திரி பதவி விஷயத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். பா. ஜனதா இந்த சமுதாயத்தை உடைக்க முயற்சி செய்கிறது. நாங்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்கு தடை விதிப்பதாக எங்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

காங்கிரஸ் கட்சிக்கு அவதூறு பேச்சு மீது நம்பிக்கை இல்லை. பேச்சுகளை திரித்து அதை தவறாக பயன்படுத்தும் கலை பா.ஜனதாவுக்கு நன்கு தெரியும். மோடி தன்னை காங்கிரஸ் கட்சி அடிக்கடி அவதூறாக பேசுவதாக அழுகிறார். இந்த விஷயத்தை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் வளர்ச்சி பணிகள் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story