திருமணம் செய்த பெண்ணுடனான ஒருமித்த பாலியல் உறவு பலாத்காரம் ஆகாது: ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு


திருமணம் செய்த பெண்ணுடனான ஒருமித்த பாலியல் உறவு பலாத்காரம் ஆகாது: ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு
x

திருமணம் செய்த பெண்ணுடன் ஒருமித்த சம்மதத்துடன் மேற்கொள்ளும் பாலியல் உறவு பலாத்காரம் ஆகாது என ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது.



ராஞ்சி,


ஜார்க்கண்டில், மணீஷ் குமார் என்பவர் மீது போலீசில், பெண் ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். பொய்யான திருமண வாக்குறுதி அளித்து மணீஷ் பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டார் என்று அந்த புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

புகாரின்படி, 2019-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட பெண்ணை மணீஷ் சந்தித்து உள்ளார். அந்த நேரத்தில், கணவரிடம் இருந்து அந்த பெண் விவாகரத்து பெறும் நடைமுறையில் ஈடுபட்டு இருந்து உள்ளார்.

விவாகரத்து நடைமுறைகள் முடிந்த பின் திருமணம் செய்து கொள்கிறேன் என மணீஷ் உறுதியளித்து, அந்த ஆண்டு டிசம்பரில் கோவிலில் வைத்து பெண்ணுக்கு குங்கும பொட்டு வைத்து உள்ளார்.

இதன்பின் இந்த ஜோடி பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர் என இதுபற்றிய புகாரின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. எனினும், 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் பெண்ணை திருமணம் செய்ய முடியாது என கூறி மணீஷ் மறுத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் மீது போலீசில் பலாத்கார புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து மணீஷ் குமார் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நீதிபதி சஞ்சய் திவிவேதி தலைமையிலான ஒரு நபர் அமர்வு முன் விசாரணைக்கு வந்துள்ளது.

அதன்மீது நடந்த விசாரணையில் கோர்ட்டு, அந்த பெண் திருமணம் ஆனவர் என்று அவருக்கே தெரியும். திருமணம் நடக்காது என்றும் அவருக்கு தெரியும் என குறிப்பிட்டதுடன், இருந்தபோதும் பாலியல் உறவை அந்த பெண் தேர்ந்தெடுத்து உள்ளார்.

இந்த வாக்குறுதியானது சட்டவிரோதம். பலாத்கார பிரிவின் கீழ் வாதத்திற்கான அடிப்படையாக இதனை கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டதுடன், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட்டு உள்ளது. புதிய வழக்காக இதனை விசாரிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கணவர் தவிர பிற ஆடவர், பொய்யான வாக்குறுதி அடிப்படையில் தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொள்வதற்கு அனுமதி வழங்கும்படி, திருமணம் ஆன ஒரு பெண்ணை கவர்ந்திழுக்க முடியாது என்றும் அந்த செயலை பலாத்காரம் என எடுத்து கொள்ள முடியாது என்றும் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.


Next Story