காஷ்மீரில் ஜி-20 குழுவினர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம்... பாதுகாப்பு படை முறியடிப்பு
மும்பை தாக்குதலை போன்று காஷ்மீரில் ஜி-20 குழுவினர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டமிட்டது தெரிய வந்து உள்ளது.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில், குல்மார்க் பகுதியில் ஜி-20 குழுவினரின் சுற்றுலா பணியாளர் குழுவினர் பங்கேற்கும் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, கடைசி நிமிடத்தில் கூட்டம் நடைபெறும் இடம் மாற்றியமைக்கப்பட்டது. இதனால், பெரும் தாக்குதல் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன.
காஷ்மீரில் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாத கடைசி வாரம், நடந்த தேடுதல் வேட்டையில் பரூக் அகமது வானி என்பவரை பாதுகாப்பு படையினர் கைது செய்திருந்தனர். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பினருடன் அவருக்கு தொடர்பு உள்ளது.
இதில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஊழியர் போன்று வேலை பார்த்து வந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தரைமட்ட பணியாளரான வானிக்கு தொடர்பு இருந்து உள்ளது.
அவரிடம் நடந்த விசாரணையில், மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பரில் நடந்த தாக்குதலை போன்று காஷ்மீரில், ஜி-20 குழுவினர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிய வந்து உள்ளது.
இந்த தரைமட்ட பணியாளர்கள், பயங்கரவாதிகளுக்கு தேவையான தளவாடங்கள் உதவி, நிதி, புகலிடம் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருபவர்கள் ஆவர்.
அவர்களின் உதவியுடன், ஆயுத குழுக்கள் மற்றும் ஹிஜ்புல் முஜாகிதீன் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற ஊடுருவல் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.