நீதிபதி மீது காலணிகளை வீசிய கட்டிட தொழிலாளி கைது


நீதிபதி மீது காலணிகளை வீசிய கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 15 Oct 2022 6:45 PM GMT (Updated: 15 Oct 2022 6:46 PM GMT)

மதுகுடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக அபராதம் விதித்ததற்கு நீதிபதி மீது கட்டிட தொழிலாளி ஒருவர் காலணிகளை வீசினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு;


அபராதம்

சிக்கமகளூரு டவுன் அரவிந்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்(வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் டவுன் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அதில் அவர் மதுகுடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றதாக தெரிகிறது.

அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் தள்ளாடியபடி வந்த லோகேசை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் மதுகுடித்திருப்பதை உறுதி செய்த போலீசார் அவரை கோர்ட்டில் அபராதம் செலுத்துமாறு நோட்டீசு கொடுத்தனர்.

கைது

இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு லோகேசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி சாந்தினி, அவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அந்த அபராத தொகையை அவர் கோர்ட்டில் செலுத்தினார். இதையடுத்து நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த லோகேஷ், அத்துமீறி கோர்ட்டிற்குள் நுழைந்து தான் காலில் அணிந்திருந்த காலணிகளை கழற்றி நீதிபதி சாந்தினி மீது வீசினார். மேலும் ஆக்ரோஷமாக சத்தம் போட்டார். இதனை சற்றும் எதிர்பாராத நீதிபதி சாந்தினி, குனிந்து கொண்டாா். இதனால் அதிர்ஷ்ட வசமாகஅவர் மீது காலணிகள் படவில்லை.

இதைப்பார்த்த அங்கிருந்த போலீசார் லோகேசை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் அத்துமீறி நுழைந்ததற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோா்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story