தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு


தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:47 PM GMT)

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதா?அல்லது வேண்டாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும், மேலும் ஒழுங்காற்று குழுவில் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய அளவுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீர் திறக்கப்படவில்லை. இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் அந்த குழு, தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதற்கு மண்டியா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி நதி நீர் விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக கர்நாடக அனைத்துக்கட்சி அவசர கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள் கிருஷ்ண பைரேகவுடா, ராமலிங்கரெட்டி, பரமேஸ்வர், கே.என்.ராஜண்ணா, செலுவராயசாமி, என்.எஸ்.போசராஜு, மது பங்காரப்பா, கே.எச்.முனியப்பா, வெங்கடேஷ், எச்.கே.பட்டீல், ஜமீர்அகமதுகான், முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, பா.ஜனதாவை சேர்ந்த எம்.பி.க்கள் பி.சி.மோகன், பிரதாப்சிம்ஹா, கர்நாடக அரசின் தலைமை செயலாளர் வந்திதா சர்மா, மண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி. நடிகை சுமலதா, எம்.எல்.ஏ.க்கள் ஜனார்த்தனரெட்டி, தர்ஷன் புட்டண்ணய்யா மற்றும் காவிரி படுகையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் மேலும் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ள காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், அது குடிநீருக்கே போதாது. எனவே தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கூடாது என ஒருமித்த குரலில் வலியுறுத்தினர்.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. நீர் (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) திறந்துவிட வேண்டும். அதன்படி தமிழகத்திற்கு இதுவரை 99 டி.எம்.சி. நீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் மழை பற்றாக்குறையால் அணைகள் நிரம்பவில்லை. இதன் காரணமாக தமிழகத்திற்கு இதுவரை 37 டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 103 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. இதில் பாசனத்திற்கு 70 டி.எம்.சி.யும், குடிநீருக்கு 33 டி.எம்.சி.யும், தொழில் நிறுவனங்களுக்கு 3 டி.எம்.சி.யும் தேவை. தற்போது அணைகளில் 53 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது.

அதனால் எங்களிடம் போதிய நீரும் இல்லை. கர்நாடக அதிகாரிகள் இதன் உண்மை நிலையை ஒழுங்காற்று குழு கூட்டத்தில் விவரமாக எடுத்துக் கூறியுள்ளனர். ஆனாலும் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று அந்த குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக விவசாயிகளின் நலனை புறக்கணித்துவிட்டு தண்ணீர் திறக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

கடந்த மாதம் (ஆகஸ்டு) 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. அணைகளில் நீர் மிக குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப நிபுணர்கள், சட்ட நிபுணர்கள், பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இயல்பான அளவில் மழை பெய்யும்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. கடந்த ஆண்டு (2022) 667

டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டது. இடர்பாடு சூத்திரம் வகுக்கப்படாததால் கர்நாடகம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று (நேற்று) டெல்லி சென்று ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்தித்து கர்நாடகத்தின் நிலையை விவாிக்கிறார்.

காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி ஒரு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு மனுவை தாக்கல் செய்து, கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை என்பதை விவரிக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் காவிரி நீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை.

பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு நேரம் ஒதுக்குமாறு கேட்டு ஏற்கனவே கடிதம் எழுதினோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

மீண்டும் ஒரு முறை பிரதமருக்கு கடிதம் எழுதப்படும். வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதை மனதில் வைத்து கர்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். அங்கும் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story