தெலுங்கானாவில் தொடர் கனமழை : பள்ளி ,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை நீட்டிப்பு
தெலுங்கானாவில் தொடர் மழை பெய்து வருகிறது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் தொடர் மழை பெய்து வருகிறது.தலைநகர் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவிக்கும் மக்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்கிறது. கரையோர பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால் தெலங்கானாவில் கடந்த 11-ம் தேதி முதல் நேற்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் 14, 15, 16 ஆகிய தேதிகள் வரை மேலும் 3 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும் திங்கட்கிழமை 18-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என கல்வித் துறை மந்திரி சபீதா இந்திரா ரெட்டி அறிவித்துள்ளார்.