டெல்லியில் தொடர் மழை; பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு
டெல்லியில் இன்று காலை முதல் பெய்து வரும் மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் பல பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. எனினும், தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் அன்றாட பணிகளுக்கு செல்லும் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.
டெல்லியில் தொடர் மழையால் டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லி-குர்காவன் சாலையிலும் வாகன போக்குவரத்து ஏற்பட்டது. டெல்லியில் ஒரு புறம் காற்று மாசு அதிகரித்து காணப்படும் சூழலில் வாகனங்களின் புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டும் நீண்ட காலம் கூறப்பட்டு வருகிறது.
இதனால், டெல்லி அரசு வாகன கட்டுப்பாட்டுக்கான திட்டங்களை அமல்படுத்தியது. எனினும், நகர பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
தொடர் மழையால் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளன. இதனால், வாகனங்கள் வேறு, வேறு வழிகளில் பயணிக்கின்றன. ஒரே வழியில் அதிக வாகனங்கள் செல்லும் நிலை நேரிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.