பிரதமர் மோடிக்கு எதிரான சர்ச்சை பேச்சு; மாலத்தீவு தூதருக்கு சம்மன்


பிரதமர் மோடிக்கு எதிரான சர்ச்சை பேச்சு; மாலத்தீவு தூதருக்கு சம்மன்
x

நடிகர்கள் சல்மான் கான், அக்சய் குமார், நடிகை ஷ்ரத்தா கபூர், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில், கண்டனம் தெரிவிக்கும் வகையில், பதிவை வெளியிட்டனர்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு கடந்த 4-ந்தேதி சென்றார். இந்தியாவின் ஒரு பகுதியான லட்சத்தீவின் கவரட்டி நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர், லேப்டாப்கள், இருசக்கர வாகனங்கள், விவசாய கடன் அட்டை, ஆயுஷ்மான் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடி, லட்சத்தீவு பயணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், இயற்கை அழகுடன் லட்சத்தீவின் அமைதி மனம் மயங்க செய்கிறது. லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். அவர்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன் என பதிவிட்டார்.

எனினும், இதற்கு மாலத்தீவில் அரசு அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்து எதிர்மறையாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. ஆளும் பி.பி.எம். கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் இந்தியர்களை கேலி செய்தும், இனவெறியை காட்டும் வகையிலும் பதிவு வெளியிட்டார். இதனை தொடர்ந்து, மாலத்தீவு மந்திரிகளான மரியம் ஷியுனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஜ்ஜூம் மஜித் ஆகிய 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்தது.

கடந்த நவம்பரில் மாலத்தீவில் அதிபராக பொறுப்பேற்று கொண்ட முகமது மிஜ்ஜு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பிருந்து, மாலத்தீவில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட இந்திய படைகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆட்சிக்கு வந்த பின்பும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பின்னர், துருக்கிக்கு பயணம் மேற்கொண்ட முகமது அடுத்து, சீனாவுக்கு பயணிக்க திட்டமிட்டு உள்ளார். துருக்கி மற்றும் சீனா இரண்டும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட கூடியவை என பார்க்கப்படும் நாடுகள் ஆகும். இந்த சூழலில், பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டபோது, ஏற்படுத்தப்பட்ட நீர் சார்ந்த ஆய்வு ஒப்பந்தம் ஒன்றை புதுப்பிக்க முடியாது என்று மாலத்தீவு அரசு கடந்த டிசம்பரில் தெரிவித்து விட்டது.

இதேபோன்று, கடல்வழி எல்லையை ரோந்து சென்று கண்காணிக்கும் பணிக்காக இந்தியாவால் பரிசாக அளிக்கப்பட்ட 3 விமானங்களை இயக்கும் வகையில் இந்திய வீரர்கள் குறைந்த அளவில் அந்நாட்டில் உள்ளனர். ஆனால், மாலத்தீவில் உள்ள 75 இந்திய ராணுவ வீரர்களை நீக்குவது என்ற தேர்தல் உறுதியை வழங்கிய மிஜ்ஜு பதவியேற்ற பின்னர், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தலைகீழானது.

இந்த சூழலில், ஆளும் அரசில் உள்ளவர்களின் கருத்துகளுக்கு நடிகர்கள் சல்மான் கான், அக்சய் குமார், நடிகை ஷ்ரத்தா கபூர், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பதிவை வெளியிட்டனர். இந்தியர்களுக்கு எதிரான, மாலத்தீவில் உள்ள பிரபல நபர்களின் வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகள் ஆச்சரியம் ஏற்படுத்துகின்றன. அதிக சுற்றுலாவாசிகளை அனுப்பும் நாட்டுக்கு எதிராக அவர்கள் இதனை செய்கின்றனர் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், அரசு பதவிகளில் இருந்து கொண்டு சமூக ஊடகத்தில் இதுபோன்ற பதிவுகளை வெளியிட்ட நபர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு அரசு வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

அதில், இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக சமூக ஊடகத்தில் சர்ச்சைக்குரிய வகையில், மாலத்தீவின் 3 மந்திரிகள் பதிவிட்டு இருந்தனர். இதற்கு இந்தியர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். பலர் மாலத்தீவுக்கான தங்களுடைய பயணங்களையும் ரத்து செய்தனர்.

இது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், இது அரசின் பார்வையல்ல என்றும், அதற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறி மாலத்தீவு அரசும் விலகி கொண்டது.

இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாலத்தீவு வெளிவிவகார அமைச்சகமும் செய்தி வெளியிட்டு இருந்தது. கருத்து சுதந்திரம் வெளிப்படுத்துவது என்பது ஜனநாயகம் மற்றும் பொறுப்பான முறையில் இருக்க வேண்டும். அது வெறுப்பை பரப்பும் மற்றும் எதிர்மறையாக, மாலத்தீவு மற்றும் அதன் சர்வதேச நட்பு நாடுகளுடனான நெருங்கிய உறவுகளுக்கு தடையாக இருக்க கூடாது என்றும் தெரிவித்து இருந்தது.

இதேபோன்று கேலியான பதிவுக்கு, மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்துள்ளார். மந்திரி மரியம் ஷியூனா பயன்படுத்தும் மொழி பயங்கரமானது. மாலத்தீவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா நெருங்கிய கூட்டாளி என்று கூறினார். அதனால், அவர்களின் கருத்துகளில் இருந்து மாலத்தீவு அரசு விலகி இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

இதுபோன்ற சூழலில், பிரதமர் மோடிக்கு எதிரான விவகாரத்தில் மாலத்தீவு தூதர் இப்ராகிம் ஷாகீப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.


Next Story