சுட்டுக்கொல்லும் சட்டம் வேண்டும் என சர்ச்சை பேச்சு; பா.ஜ.க. முன்னாள் மந்திரி ஈசுவரப்பா மீது வழக்கு பதிவு


சுட்டுக்கொல்லும் சட்டம் வேண்டும் என சர்ச்சை பேச்சு; பா.ஜ.க. முன்னாள் மந்திரி ஈசுவரப்பா மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 10 Feb 2024 2:22 AM GMT (Updated: 10 Feb 2024 2:40 AM GMT)

ஈசுவரப்பாவுக்கு எதிராக, தேவாங்கரே நகரில் உள்ள பராங்கே காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேவாங்கரே,

கர்நாடகாவின் தேவாங்கரே மாவட்டத்தில் நடந்த கர்நாடக பா.ஜ.க. புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மற்றும் முன்னாள் மந்திரியான ஈசுவரப்பா கலந்து கொண்டார்.

அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, டி.கே. சுரேஷ் மற்றும் வினய் குல்கர்னி இருவரும் தேச துரோகிகள். ஜின்னாவின் வழித்தோன்றல்களாக உள்ளவர்கள் நாட்டை பிரிப்பது பற்றி பேசுகின்றனர். நாட்டை பிரிப்பவர்களை விட்டு விட கூடாது.

அவர்கள் சுட்டு கொல்லப்பட வேண்டும். அந்த வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியை நான் கேட்டு கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, காங்கிரஸ் தலைவர்களான பிரியங்க கார்கே, ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததுடன், 24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.

இந்நிலையில், ஈசுவரப்பாவுக்கு எதிராக, தேவாங்கரே நகரில் உள்ள பராங்கே காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது என கர்நாடக உள்துறை மந்திரி பரமேஷ்வரும் உறுதி செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான டி.கே. சுரேஷ் குமார் சமீபத்தில், இடைக்கால பட்ஜெட் தாக்கலான பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தென்னிந்தியாவுக்கு அனைத்து நிலைகளிலும், அனைத்து விவகாரங்களிலும் அநீதி இழைக்கப்படுகிறது.

எங்களுடைய பணம் எங்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். அது ஜி.எஸ்.டி.யோ, சுங்க வரியோ அல்லது நேரடி வரியோ, எங்களுடைய சரியான பங்கு எங்களுக்கு வேண்டும். வளர்ச்சிக்கான எங்களுடைய பங்கு பணம், வடஇந்தியாவுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

வருகிற நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்காவிட்டால், இந்தி பேசும் பகுதிகள் நம் மீது கட்டாயப்படுத்தும் சூழலின் முடிவால், தனிநாடுக்கான கோரிக்கையை நாம் முன் வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறினார்.


Next Story