ஸ்கேட்டிங் செய்தபோது சொகுசு கார் மோதியது: போலீஸ் அதிகாரி மகன் பலி


ஸ்கேட்டிங் செய்தபோது சொகுசு கார் மோதியது: போலீஸ் அதிகாரி மகன் பலி
x

நமீஷ் மீது மோதிய வெள்ளை நிற சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சொகுசு கார் மோதியதில் போலீஸ் அதிகாரியின் மகன் ஒருவர் உயிரிழந்தார்.

இதுபற்றி துணை கமிஷனர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது,

லக்னோவின் கோமதிநகர் விரிவாக்கம் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஏஎஸ்பி-யின் மகன் நமீஷ் (வயது 10) ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அதிவேகத்தில் வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த நமீஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்த பின்னர், நமீஷ் மீது மோதிய வெள்ளை நிற சொகுசு கார் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், சர்தக் சிங் மற்றும் தேவஸ்ரீ வர்மா என தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story