"சமீப காலமாக அதிகரிக்கும் மாரடைப்புக்கு கொரோனாவே காரணம்" - மன்சுக் மாண்டவியா தகவல்


சமீப காலமாக அதிகரிக்கும் மாரடைப்புக்கு கொரோனாவே காரணம் - மன்சுக் மாண்டவியா தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2023 10:05 AM GMT (Updated: 30 Oct 2023 10:20 AM GMT)

சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக இளம் வயதினர் (20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோர்) மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

உடல்நலம் நன்றாக இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு, திடீரென மாரடைப்பு ஏற்படுவது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில், குஜராத் மாநிலத்தில் பிரபலமான 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கார்பா நடன கொண்டாட்டங்களின் போது மாநிலத்தில் மட்டும் 22 பேர் துரதிர்ஷ்டவசமாக, மாரடைப்பால் உயிரிழந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமீப காலமாக அதிகரிக்கும் மாரடைப்புகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில்,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் உடலை அதிகம் வருத்தி கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தீவிர கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 2 வருடங்கள் வரை உடலுக்கு அதிக சிரமம் தரும் உடற்பயிற்சியிலோ அல்லது கடின உழைப்பு தேவைப்படும் செயல்களிலோ ஈடுபட கூடாது. இதனால் மாரடைப்பு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.


Next Story