தட்சிண கன்னடா, உடுப்பியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு


தட்சிண கன்னடா, உடுப்பியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:47 PM GMT)

தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை பணிகளை சுகாதாரத்துறையினர் அதிகப்படுத்தி உள்ளனர்.

மங்களூரு

பி.எப்-7 கொரோனா

சீனாவில் அதிகரித்து வரும் பி.எப்-7 கொரோனா தொற்றால், உலக நாடுகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த கொரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் மாநில அரசு பரிசோதனைகளை நடத்த தொடங்கிவிட்டது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு உடுப்பியில் தினமும் 50 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை செய்யப்பட்டது. தட்சிண கன்னடாவில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த சோதனையை அதிகப்படுத்தியுள்ளனர். அதன்படி உடுப்பில் தினமும் 100 முதல் 150 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 200 முதல் 250 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக விமான நிலையம், ரெயில், பஸ் நிலையங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

குறிப்பாக இந்த சோதனையின் போது சளி, காய்ச்சல், இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல புதிய வகை கொரோனா வைரசில் இருந்து மக்கள் பாதுகாக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கி விட உடுப்பி, தட்சிணகன்னடா மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளது. இதுவரை உடுப்பி மாவட்டத்தில் 10,90,865 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இரண்டாவது ேடாஸ் தடுப்பூசி 10,86,733 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர்.

இதேபோல தட்சிண கன்னடாவில் 18,85,935 பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 2-வது டோஸ் தடுப்பூசி 18,93,641 பேர் போட்டுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் மக்கள் செல்லும்போது, முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story