கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்


கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிக்கு ஒப்புதல்
x

கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் ‘எம்.ஆர்.என்.ஏ.’ தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

புனே,


கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசியை மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள ஜெனோவா பயோபார்மசியூட்டிகல்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசிக்கு 'ஜெம்கோவாக்-19' என பெயரிடப்பட்டுள்ளது.

'எம்.ஆர்.என்.ஏ.' என்பது 'மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.' என்பதன் சுருக்கம் ஆகும். 'மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.' என்பது செல்கள், புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஈடுபடுகிற ஒற்றை இழை ஆர்.என்.ஏ. வகை ஆகும்.

'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிகள் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன. குறிப்பாக, இந்த தொழில்நுட்பம், வைரசின் தற்போதுள்ள அல்லது உருவாகும் உரு மாற்ற வைரஸ்களுக்கு ஏற்ற வகையில் தடுப்பூசியை விரைவாக மாற்றுவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

மேலும் இந்த தொழில்நுட்ப தளம், இந்தியாவை தொற்று நோய்க்கு தயாராக இருக்க உதவும். இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்துள்ளன. அவை மத்திய மருந்துகள் தரக்கட்டப்பாட்டு அமைப்பிடம் வழங்கப்பட்டு, மதிப்பிடப்பட்டுள்ளன.

இதில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, சகித்துக்கொள்ளக்கூடியது, நோய் எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளது என்று தெரிய வந்துள்ளதாக ஜெனோவா பயோபார்மசியூடிக்கல்ஸ் நிறுவனம் கூறுகிறது. இதன் அடிப்படையில் இந்த தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதலை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கி உள்ளது. இந்த தகவல்களை ஜெனோவா பயோபார்மசியூடிக்கல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


Next Story