இந்தியாவில் 63 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு - தமிழகத்தில் 4 பேருக்கு தொற்று


இந்தியாவில் 63 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு - தமிழகத்தில் 4 பேருக்கு தொற்று
x

கோப்புப்படம்

ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா, கேரளாவில் முதல்முறையாக கண்டறியப்பட்டது.

புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று ஓய்ந்த நிலையில், ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா, கேரளாவில் முதல்முறையாக கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் 63 பேருக்கு புதியவகை கொரோனா தாக்கியது கண்டறியப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோவா மாநிலத்தில் மட்டும் 34 பேரிடம் புதியவகை கொரோனா கண்டறியப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழ்நாட்டில் 4 பேருக்கும், தெலுங்கானா மாநிலத்தில் 2 பேருக்கும் புதியவகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இருப்பினும், புதியவகை கொரோனா லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும், 92 சதவீத நோயாளிகள் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, புதியவகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தன.

ஜே.என்.1 புதியவகை கொரோனாவை விஞ்ஞானிகள் உன்னிப்பாக ஆய்வு செய்து வருவதாக நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார். இருப்பினும், கொரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் 628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 656 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 54 ஆக அதிகரித்தது. கேரளாவில் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 334 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு (WHO) தென்கிழக்கு ஆசிய நாடுகளை கண்காணிப்பை அதிகரிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியது. உலக சுகாதார அமைப்பு, ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனாவை வகைப்படுத்தியுள்ளது, இருப்பினும், தற்போதைய சான்றுகளின் அடிப்படையில் துணை மாறுபாட்டால் ஏற்படும் ஒட்டுமொத்த ஆபத்து குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story