திரும்ப வந்துட்டேனு சொல்லு: புதிய அவராத்தில் களமிறங்கிய கொரோனா...எரிஸ்...!
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது. அதில் ஒருவருக்கு எரிஸ் தோற்று இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை,
உலக அளவில் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கோவிட்-19 வைரசின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரானின் துணை மாறுபாடு ஈஜி.5.1 என்று அழைக்கப்படும் எரிஸ் (ERIS) வைரஸ் ஆனது அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
மேலும், இந்தியாவின் மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது. அதில் ஒருவருக்கு எரிஸ் தோற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய ஓமிக்ரான் மாறுபாடான எரிஸ் முதன்முதலில் மே மாதத்தில் கண்டறியப்பட்டது. ஆனால், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களின் அதன் தாக்கம் இல்லை எனக் கூறப்படுகிறது.
மாநில சுகாதாரத் துறை தரவுகளின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூலை இறுதியில் 70 ஆக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 115 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. புதிய தொற்றான எரிஸ் இங்கிலாந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
இதனால் மக்கள் பயப்படத் தேவையில்லை என்றாலும், இதனை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம். கொரோனா தொற்றின் அதிகரிப்பு முந்தைய நோய்த்தொற்றுகள் அல்லது தடுப்பூசிகளால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக இருக்கலாம். எனவே, பூஸ்டர் தடுப்பூசிகளை போடுவது அவசியமாகும்.
இந்த தொற்று உள்ளவருக்கு இருமல், சளி, காய்ச்சல், தொண்டை வலி மற்றும் மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும். ஆனால் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் சில பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.