பிரதமரின் சுதந்திர தின உரை: பொய்கள், வெற்று வாக்குறுதிகள் நிறைந்த தேர்தல் பேச்சு - காங்கிரஸ் விமர்சனம்


பிரதமரின் சுதந்திர தின உரை: பொய்கள், வெற்று வாக்குறுதிகள் நிறைந்த தேர்தல் பேச்சு - காங்கிரஸ் விமர்சனம்
x

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை பொய்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகள் நிறைந்த தேர்தல் பேச்சு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தனது 90 நிமிட உரையில் நாட்டின் சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என உறுதியளித்தார்.

மேலும் ஊழலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவேன் என்றும், சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவையே எனது தாரக மந்திரம் என்றும் அவர் பேசினார்.

காங்கிரஸ் விமர்சனம்

இந்த நிலையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை பொய்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகள் நிறைந்த தேர்தல் பேச்சு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

இன்றைய (நேற்று) சுதந்திர தின உரையில் கடந்த 9 ஆண்டுகளில் தனது அரசு என்ன சாதித்துள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிப்பதை விட, திரித்து பேசுதல், மிகைப்படுத்துதல், பொய்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகள் நிறைந்த தேர்தல் உரையை பிரதமர் மோடி வழங்கினார்.

நாட்டை ஒன்றிணைப்பதற்கும், இதுவரையிலான நமது பயணத்தை கொண்டாடுவதற்கும், அந்த துன்பங்களின் வலியையும் வேதனையையும் ஒப்புக்கொள்வதற்கும், வரவிருக்கும் சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும் பதிலாக மோடி தன்னை பற்றியும், தனக்கான மரியாதை குறித்தும் பெருமை பேசினார்.

மணிப்பூர் விவகாரம்

மணிப்பூரில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட பேரழிவுகளை, நாட்டின் பிற பகுதிகளில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, பிரதமர் உரையாற்றினார். மணிப்பூரை போர்க்களமாக மாற்றுவதற்கு வழிவகுத்த மோசமான தோல்விகள் குறித்து அவர் வருத்தமோ அல்லது ஒப்புக்கொள்ளவோ இல்லை.

மணிப்பூரில் பெண்கள் கொடூரமான முறையில் அத்துமீறலுக்கு ஆளான கதியை முழு தேசமும் பார்த்தபோது, அவர் 'பாரத மாதா' புத்துயிர் பெறுவதாக துணிச்சலாக கூறுகிறார்.

கொரோனா தொற்றுநோயின் போது இந்தியாவின் திறனை உலகம் வியந்து பார்த்ததாக பிரதமர் கூறினார். ஆனால் தொற்றுநோயின் பேரழிவுகரமான இரண்டாவது அலையின் போது ஆஸ்பத்திரிகளுக்கு வெளியே உடல்கள் குவிக்கப்பட்டதையும் கங்கையில் பாய்ந்ததையும் உலகம் மறக்கவில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

பிரதமர் உரையை புறக்கணித்த கார்கே

முன்னதாக சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து, உரையாற்றியபோது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை. அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்தது. பிரதமரின் சுதந்திர தின உரை நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணித்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் கார்கே தனது இல்லத்திலும், பின்னர் காங்கிரஸ் தலைமையகத்திலும் தேசிய கொடியை ஏற்றினார்.

கலந்து கொள்ளாதது ஏன்?

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்கே டெல்லி செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பது குறித்து விளக்கமளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு கண் தொடர்பான சில பிரச்சினைகள் இருந்தது. அதோடு, நெறிமுறைகளின்படி நான் என்னுடைய வீட்டில் மூவர்ண கொடி ஏற்றவேண்டும். அதன் பின்னர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்து அங்கும் தேசிய கொடி ஏற்றவேண்டும். எனவே என்னால் செங்கோட்டைக்கு செல்ல முடியவில்லை" என்றார்.

வீட்டில் கொடி ஏற்றுவார்

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி தனது உரையின்போது, "அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டின் சாதனைகளை பட்டியலிடுவேன்" என கூறியதை கார்கே கடுமையாக விமர்சித்தார்.

இதுபற்றி அவர் பேசுகையில், "உங்களது வெற்றியோ தோல்வியோ அது மக்களின் கையில், வாக்காளர்களின் கையில் உள்ளது. 2024-ல் மீண்டும் ஒரு முறை செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்று இப்போதே கூறுவது ஆணவம். அடுத்த ஆண்டு அவர் (பிரதமர் மோடி) மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார்" என காட்டமாக கூறினார்.


Next Story