பெண்களுக்கு எதிரான குற்றங்கள்; நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.பி.க்கள் போராட்டம்


பெண்களுக்கு எதிரான குற்றங்கள்; நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.பி.க்கள் போராட்டம்
x

ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் பா.ஜ.க. எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கி, வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. மணிப்பூர் சம்பவம் உள்ளிட்ட விவகாரங்களால் கடந்த 2 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று 3-வது நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறுகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்தும் மற்றும் பிற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் பா.ஜ.க. எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் கூறும்போது, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம் மற்றும் மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காணப்படுகின்றன.

எதிர்க்கட்சிகள் மணிப்பூரை மட்டுமே பார்க்கின்றன. ஆனால், ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்கள் தவிர்க்கப்பட்டு விட்டன. ராஜஸ்தானில் உள்ள பெண்களை பாதுகாக்க மாநில அரசு தவறி விட்டது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் சமீபத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பலாத்காரம் மற்றும் படுகொலை செய்யப்பட்டு, கிணறு ஒன்றில் தூக்கி வீசப்பட்டார்.

இந்த சம்பவம் சட்டசபையில் கடுமையாக எதிரொலித்தது. இதேபோன்று, ஜோத்பூர் மாவட்டத்தில் ராம்நகரில் செராய் கிராமத்தில் எரிந்த நிலையில் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

கடந்த ஞாயிற்று கிழமை 17 வயது டீன்-ஏஜ் சிறுமியை 3 கல்லூரி மாணவர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தில், சிறுமியின் காதலரை அவர்கள் அடித்து, தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் அனைவரும் 20 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்ற சம்பவங்களை கண்டித்து முதல்-மந்திரி அசோக் கெலாட் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியது.

இந்த சூழலில், டெல்லியில் ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் மற்றும் குற்றங்களை கண்டித்து நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் பா.ஜ.க. எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story