அரசை விமர்சிப்பது, நாட்டை விமர்சனம் செய்வது ஆகாது: காங்கிரஸ் கட்சி


அரசை விமர்சிப்பது, நாட்டை விமர்சனம் செய்வது ஆகாது: காங்கிரஸ் கட்சி
x

அரசை விமர்சிப்பது என்பது நாட்டை விமர்சனம் செய்வது ஆகாது என்று காங்கிரஸ் கட்சி இன்று கூறியுள்ளது.



புதுடெல்லி,


நாடாளுமன்றத்தில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் எம்.பி.க்களின் தொடர் அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் முழுவதும், இங்கிலாந்து நாட்டில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளுங்கட்சியும், தொழிலதிபர் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினரும் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எம்.பி.க்களின் தொடர் அமளியால் இன்றும் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அரசை விமர்சிப்பது என்பது நாட்டை விமர்சனம் செய்வது ஆகாது. இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும். விவாதங்கள், ஜனநாயக முறையை பலவீனம் அடைய செய்வது இல்லை. அதற்கு பதிலாக வலுப்படுத்தவே செய்யும்.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளில் இருந்து தப்பிக்கும் முயற்சியாகவே, அரசு இந்த நாடகம் போடும் வேலையில் ஈடுபடுகிறது. அதானியுடனான பிரதமரின் தொடர்பு பற்றி ராகுல் காந்தி மீண்டும் கேள்வி கேட்டு விடுவார் என்று அவர்கள் அச்சத்தில் உள்ளனர். நாடாளுமன்ற கூட்டு குழு இன்னும் அமைக்கப்படவில்லை. அதுவே, இதுபோன்று அவர்கள் நாடகம் போடுவதற்கான காரணம் ஆகும் என கூறியுள்ளார்.

ராகுல் காந்தியை மீர் ஜாபர் என பா.ஜ.க. குறிப்பிட்டது பற்றி பேசிய பவன் கேரா, அவர் (சம்பித் பத்ரா) விரைவில் ஒரு வலிமையான பதிலை பெறுவார். அவர்களிடம் இருந்து எப்படி பதில் தரவேண்டும் என்று நாங்களும் கற்று கொண்டு வருகிறோம். அவரது பேச்சு பற்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.


Next Story