பருவம் தவறிய மழையால் பயிர்கள் சேதம்; சேதம் மதிப்பிடும் பணி நடக்கிறது - மத்திய வேளாண் மந்திரி


பருவம் தவறிய மழையால் பயிர்கள் சேதம்; சேதம் மதிப்பிடும் பணி நடக்கிறது  -  மத்திய வேளாண் மந்திரி
x

பருவம் தவறிய மழையால் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்திருப்பதாகவும், அவற்றை மதிப்பிடும் பணிகள் நடந்து வருவதாகவும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

பயிர்கள் சேதம்

நாட்டின் பல பகுதிகளில் பருவம் தவறிய மழையால் பெருத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

எனவே தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல மாநிலங்களில் மத்திய-மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய ேவளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த பயிர் சேதம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது அவர் கூறியதாவது:-

தேசிய பேரிடர் நிவாரண நிதி

நிச்சயமாக... பருவம் தவறிய மழை காரணமாக பயிர்கள் பல பகுதிகளில் சேதமடைந்திருக்கின்றன. அவற்றை மதிப்பிடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சேதம் குறித்து மாநிலங்கள் அளிக்கும் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

விவசாயிகள் பருவமழைைய சார்ந்து இருக்கின்றனர். ஆனால் அது கணிக்க முடியாதது. பயிர்களை பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுத்தாலும், இயற்கையின் தயவில்தான் அவர்கள் உள்ளனர்.

மாநில அரசுகளிடம் மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது. அதன் மூலம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முடியும். ேசத விவரங்கள் கிடைத்ததும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மேலும் நிதி விடுவிக்கப்படும்.

குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

குறுவை சாகுபடி

இதற்கிடையே, நாடு முழுவதும் குறுைவ பயிர்கள், குறிப்பாக எண்ணெய் வித்துகள் மற்றும் பயறு வகைகளின் விதைப்பு தொடங்கப்பட்டு, இதுவரை சுமார் 7.34 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் கூறியுள்ளது.

குறுவை சாகுபடியின் முக்கிய பயிரான கோதுமையின் விதைப்பு தொடர்பான விவரங்களை மாநிலங்கள் இதுவரை வழங்கவில்லை என்றும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.


Next Story