கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் ஆகிறார், சி.டி.ரவி?


கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் ஆகிறார், சி.டி.ரவி?
x

தேசிய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக சி.டி.ரவி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா தலைமை இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

பெங்களூரு:

தேசிய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக சி.டி.ரவி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா தலைமை இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

சி.டி.ரவி நீக்கம்

பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கர்நாடகத்தை சேர்ந்த சி.டி.ரவி இருந்து வந்தார். அவர், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளராகவும் இருந்தார். இந்த நிலையில், நேற்று தேசிய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சி.டி.ரவியை நீக்கி பா.ஜனதா தலைமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அவர், கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏனெனில் கர்நாடக மாநில தலைவராக இருந்த நளின்குமார் கட்டீல், சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததால், பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல், எதிர்க்கட்சி தலைவரும் இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2024) நடைபெற உள்ளதால், கர்நாடகத்தில் பா.ஜனதாவை பலப்படுத்த மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மாநில தலைவராக வாய்ப்பு

இதையடுத்து, அடுத்த வாரம் மாநில தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர், கட்சியில் மேலும் சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க பா.ஜனதா தலைமை முடிவு செய்திருக்கிறது. இதன் காரணமாக தான் தேசிய பொதுச் செயலாளராக சி.டி.ரவி நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மாநில தலைவர் பதவியை வழங்க பா.ஜனதா தலைமை முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சி.டி.ரவி ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். நாடாளுமன்ற தேர்தலில் ஒக்கலிக சமுதாய ஓட்டுகளை குறி வைத்து, அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும், துணை முதல்-மந்திரியாகவும் ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த டி.கே.சிவக்குமார் உள்ளார். ஒக்கலிக சமுதாயத்தின் ஓட்டு வங்கியாக ஜனதாதளம்(எஸ்) கட்சி இருந்து வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர் யார்?

இதுபோன்ற காரணங்களாலும், கர்நாடக அரசியல் பற்றிய அனுபவம் சி.டி.ரவிக்கு இருப்பதாலும், அவரை மாநில தலைவராக நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சி.டி.ரவி மாநில தலைவராகும் பட்சத்தில், பா.ஜனதா கட்சியின் ஓட்டு வங்கியாக லிங்காயத் சமுதாயம் உள்ளதால், அந்த சமுதாயத்தை சேர்ந்தவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ.வுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இதுபோல், கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வழங்க கட்சி மேலிடம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறவும், கட்சியை பலப்படுத்தவும் பா.ஜனதா தலைமை முடிவு செய்திருப்பதால், அடுத்த வாரம் மாநில தலைவர், எதிர்க்கட்சி தலைவர், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் யார், யார்? என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பி.எல்.சந்தோசுக்கு மட்டும் பொறுப்பு

பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களாக கர்நாடகத்தில் பி.எல்.சந்தோஷ், சி.டி.ரவி ஆகிய 2 பேர் இருந்தனர். நேற்று சி.டி. ரவியிடம் இருந்து அந்த பொறுப்பு பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கர்நாடகத்தை சேர்ந்த யாருக்கும் தேசிய பொதுச் செயலாளர் பதவியை பா.ஜனதா தலைமை வழங்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக சட்டசபை தேர்தலில் அடைந்த தோல்வியால், கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மீதும், அவர்களது செயல்பாடுகள் மீதும் கட்சி தலைமைக்கு நம்பிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கர்நாடகத்தில் இருந்து பி.எல்.சந்தோஷ் மட்டுமே பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story