பொதுமக்களே உஷார்...! பெங்களூருவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்


பொதுமக்களே உஷார்...! பெங்களூருவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்
x

பெங்களூருவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 38 ஆயிரம் வழக்குகளில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

பெங்களூரு:

சிலிக்கான் பள்ளத்தாக்கு, தகவல் தொழில்நுட்ப நகரம் போன்ற புனைப்பெயர்களால் பெங்களூரு நகரம் அழைக்கப்படுகிறது. இந்த தகவல் தொழில்நுட்ப நகரில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்களை செல்போன்கள் மூலமாக தொடர்பு கொள்ளும் மர்மநபர்கள் வேலை வாங்கி கொடுப்பதாகவும், பரிசு கிடைத்திருப்பதாகவும், மின் கட்டணம் செலுத்தும்படியும், வங்கி கணக்குகளை புதுப்பிக்கும்படி என புது புதுவிதமாக ஏமாற்றி மோசடி செய்து வருகிறார்கள்.

இது ஒரு ரகம் என்றால், தாங்களாகவே சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி கொள்வது 2-வது ரகம். அதாவது, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தாங்களாகவே மோசடி கும்பலின் வலையில் விழுந்து பல லட்சம் ரூபாயை இழந்து சிக்கலில் தவிக்கிறார்கள். முதல் ரகத்தை காட்டிலும், 2-வது ரகத்தை சேர்ந்தவர்களை தான் சைபர் மோசடி கும்பல் அதிகம் குறி வைக்கிறது.

தெரியாமல் மோசடி கும்பலிடம் சிக்குபவர்களை விட தெரிந்தே மோசடி கும்பலிடம் சிக்குபவர்களே அதிகம் பேர் உள்ளனர். இதற்கு எளிதாக அதிகளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே முக்கிய காரணமாகும். இது தொடர் கதையாக இருந்து வருகிறது.

சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மோசடி கும்பலிடம் சிக்கி மக்கள் பணத்தை இழப்பது மட்டும் குறையவில்லை. பெங்களூருவில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 50 ஆயிரத்து 27 சைபர் குற்ற வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருக்கிறது.

இந்த மோசடியில் சிக்கியவர்களில் 70 சதவீதம் பேர் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே பொருட்களை வாங்குவது, பணபரிமாற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததும், அவர்களை குறி வைத்தே சைபர் கொள்ளையர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு பல கோடி ரூபாயை சுருட்டி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 6 ஆயிரத்து 226 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாதந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், இந்த மோசடியில் ஈடுபடும் கும்பலை மட்டும் கைது செய்வது மற்றும் தண்டனை பெற்று கொடுப்பதில் போலீசார் தவறி வருவது தெரியவந்துள்ளது. அதன்படி, பெங்களூருவில் 7 ஆண்டுகளில் பதிவான 50 ஆயிரம் வழக்குகளில், வெறும் 26 பேருக்கு மட்டுமே குற்றவாளிகளை கைது செய்து, அவர்களுக்கு போலீசார் தண்டனை பெற்று கொடுத்துள்ளனர்.

அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு 2 பேருக்கும், 2018-19-ம் ஆண்டுகளில் தலா 7 பேருக்கும், 2020-ம் ஆண்டில் 2 பேருக்கும், 2021-ம் ஆண்டில் 3 பேருக்கும், 2022-ம்

ஆணடில் 5 பேருக்கும் போலீசார் தண்டனை பெற்று கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு (2023) இதுவரை சைபர் குற்றங்களில் ஈடுபட்ட ஒருவருக்கு கூட தண்டனை கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் 7 ஆண்டுகள் பதிவான 50 ஆயிரம் வழக்குகளில், 38 ஆயிரத்து 132 வழக்குகளில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய எந்த ஒரு தகவலே, துப்புவோ போலீசாருக்கு கிடைக்கவில்லை. அநத 38 ஆயிரம் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க முடியாமலும், அவர்களை பற்றிய துப்பு கிடைக்காமலும் போலீசார் திணறி வருகின்றனர்.

பெங்களூருவில் அதிகபட்சமாக சைபர் மோசடிகள் நடந்திருப்பது ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் போது தான் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி, டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனையில் ஈடுபடும் போது சைபர் கொள்ளையர்கள் பண மோசடியில் ஈடுபட்டதாக மட்டும் 20 ஆயிரத்து 662 வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக சமூக வலைதளங்களில் பழகியும், செல்போன்களில் பரிசு பொருட்கள் விழுந்திருப்பதாக கூறியும் மோசடி செய்ததாக 9 ஆயிரத்து 198 வழக்குகளும், வேலை வாங்கி கொடுப்பதாக 4 ஆயிரத்து 453 வழக்குகளும், திருமண தகவல் மையம் பெயரில் மோசடி செய்தாக 379 வழக்குகளும், பிட்காயின் பெயரில் 251 மோசடி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களும், வங்கியில் இருந்து பேசுவதாகவும், பரிசு விழுந்ததாக கூறி பேசும் மோசடி பேர்களிடம் நாம் உஷாராக இருந்தால், சைபர் மோசடியில் இருந்து தப்பிக்கலாம்.

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கமிஷனர் தயானந்த்

போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறுகையில், பெங்களூருவில் சைபர் மோசடி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் மோசடி குறித்து இதற்கு முன்பு சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் மட்டுமே புகார் அளிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தற்போது நகரில்உள்ள சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைபர் குற்றங்ளில் ஈடுபடும் கும்பலிடம் இருந்து தப்பிக்க பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் சைபர் மோசடிகளை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

நடப்பு ஆண்டில் ரூ.17 கோடி மீட்பு

பெங்களூருவில் சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பல் பண மோசடி செய்ததால், சம்பவம் நடந்த ஒரு மணிநேரத்திற்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கும்படியும், 112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படியும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் வரை மோசடி நடந்த ஒரு மணிநேரத்திற்குள் 4 ஆயிரம் வழக்குகள் சம்பந்தமாக மக்கள் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்குகளில் மர்மநபர்கள் பொதுமக்களிடம் மோசடி செய்திருந்த ரூ.17 கோடியை மீட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கி இருந்தனர்.


Next Story