தட்சிண கன்னடா மாவட்டத்தில் மேலும் 9 இந்திரா உணவகங்கள் தொடங்கப்படும்


தட்சிண கன்னடா மாவட்டத்தில்  மேலும் 9 இந்திரா உணவகங்கள் தொடங்கப்படும்
x
தினத்தந்தி 7 Sep 2023 6:45 PM GMT (Updated: 7 Sep 2023 6:46 PM GMT)

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மேலும் 9 இந்திரா உணவகங்கள் தொடங்கப்படும் என மந்திரி ரகீம்கான் கூறினார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மேலும் 9 இந்திரா உணவகங்கள் தொடங்கப்படும் என மந்திரி ரகீம்கான் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாம் மற்றும் ஹஜ் துறை மந்திரி ரகீம்கான் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன், நகராட்சி நிர்வாக இயக்குனர் என். மஞ்சுஸ்ரீ உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மந்திரி ரகீம்கான் பேசுகையில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் தற்போது 4 இந்திரா உணவகங்கள் உள்ளன. மேலும் மாவட்டத்தில் 9 இந்திரா உணவகங்கள் அமைக்கப்பட உள்ளது. கர்நாடக முழுவதும் புதிதாக 188 இந்திரா உணவகங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகத்தில் 197 இந்திரா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

கனவு திட்டம்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பஜ்பே, பெல்தங்கடி, கின்னிகோலி, மூடபித்ரி, கடபா, முல்கி, கோட்டேகர், விட்டலா, மற்றும் சோமேஷ்வர் ஆகிய 9 இந்திரா உணவகங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்திரா உணவகம் என்பது முதல்-மந்திரி சித்தராமையா கனவு திட்டமாகும். இது ஏழைகளுக்கு உணவு வழங்குவதாகும். மேலும், பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.

இதன்மூலம் ஏழை- எளிய மக்கள் பயன் அடைவார்கள். இவ்வாறு மந்திரி ரகீம்கான் கூறினார். கூட்டத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் என். மஞ்சுஸ்ரீ கூறுகையில், இந்திரா உணவகத்தில் புதிய அட்டவணை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி உணவுகள் வழங்கப்படும். இந்திரா உணவகத்தில் ரூ.25 (காலை, மதியம், இரவு 3 நேரம்) சேர்த்து வழங்கப்பட்டு வந்தது.

புதிய டெண்டர் விடப்படும்

தற்போது 3 நேரத்திற்கு ரூ.37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்திரா உணவகத்திற்கு புதிய டெண்டர் விடப்படும். தற்போது இந்திரா உணவகங்கள் நடத்துபவர்கள் டெண்டர் முடியும் வரை நடத்தி கொள்ளலாம், என்றார்.

இந்திரா உணவகங்களில் கணினி ரசீது முறையை பின்பற்ற வேண்டும். இதன்மூலம் கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க முடியும். மேலும் உணவகங்களில் குடிநீர் வசதி, பொதுமக்களின் நிறை- குறைகளை அதிகாரிகள் அடிக்கடி கேட்டறிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன் கூறினார்.


Next Story