தத்தா குகைக்கோவிலில் சிலர் தொழுகையில் ஈடுபடுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பு


தத்தா குகைக்கோவிலில் சிலர் தொழுகையில் ஈடுபடுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பு
x

தத்தா குகைக்கோவிலில் சிலர் தொழுகையில் ஈடுபடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறினார்.

சிக்கமகளூரு

தத்தா குகைக்கோவிலில் சிலர் தொழுகையில் ஈடுபடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறினார்.

பாபாபுடன்கிரி மலை

சிக்கமகளூரு மாவட்டத்தில் பாபாபுடன்கிரி மலை அமைந்துள்ளது. இங்கு தத்தா குகைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தத்தா பாதம் இருப்பதாக இந்துக்களும், தர்கா இருப்பதாக முஸ்லிம்களும் வழிபட்டு வருகிறார்கள். இதனால் இந்த வழிபாட்டு தலம் யாருக்கு என்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி இந்த வழிபாட்டு தலத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் வழிபாடு நடத்திவிட்டு செல்கிறார்கள். அங்கு யாரும் பூஜை செய்ய அனுமதி இல்லை.

பரபரப்பு

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு தத்தாத்ரேயா ஜெயந்தி விழா கொண்டாடப்பட இந்துக்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அங்கு சிலர் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதைப்பார்த்த இந்துக்கள், அசைவ உணவு சாப்பிட்டு தங்கள் விரதத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு கூறினர். மேலும் இந்து அமைப்பினர் போராட்டமும் நடத்தினர்.

இந்த நிலையில் பாபாபுடன்கிரி குகைக்கோவிலில் சிலர் தொழுகை நடத்தி இருப்பது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைப்பார்த்த இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜனதாவினர் ஆவேசம் அடைந்துள்ளனர்.

உரிய விசாரணை

இதுபற்றி நேற்று மாவட்ட கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி பாபாபுடன்கிரி மலையில் உள்ள தத்தா குகைக்கோவிலில் சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்தப்படும். மேலும் இதுபற்றி போலீசாருடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதுவரையில் மக்கள் அமைதி காக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற வீடியோக்களை பரப்புபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story